கொரோனாவால் உயிரிழப்பு நடந்த வீட்டில் கொள்ளையடித்த கொடியவர்கள்... கோவையில் நடந்த கொடூரம்...

Youtube Video

கோவையில் ஒரே வீட்டில் மனைவி, மகள், தாய் என மூவரையும் கொரோனாவுக்கு பலிகொடுத்தவர், இறுதிச்சடங்கிற்காக சுடுகாட்டுக்கு சென்ற நிலையில், அவரது வீட்டில் மர்மநபர்கள் புகுந்து 39 சவரன் நகைகளைக் கொள்ளையடித்துள்ளனர்.

 • Share this:
  லட்சக்கணக்கான மக்கள் கொரோனா எனும் கொடிய அரக்கனால் கொத்துக்கொத்தாகச் செத்துக் கொண்டிருக்கின்றனர். இந்தச் சூழலிலும் மனிதநேயம் மரித்து விடாமல் பலர் சேவைகளிலும் உதவிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், கோவையில் கொரோனாவை விடக் கொடியவர்கள் ஒரு கொள்ளையை அரங்கேற்றியுள்ளனர்.

  கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே செங்காளிபாளையம் ஸ்ரீ ராகவேந்திரா நகரைச் சேர்ந்தவர் பரமானந்தம். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இவருக்கும் இவரது தாய் ராஜேஸ்வரி, மனைவி ஜெகதீஸ்வரி மற்றும் மகன் வெங்கட்ராமன் ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அனைவரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இந்த நிலையில் ஏப்ரல் 28 மற்றும் 29ம் தேதிகளில் தாய், மனைவி, மகன் மூவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

  பரமானந்தம் மட்டும் கொரோனா சிகிச்சையில் முழு உடல் நலம் தேறி வீடு திரும்பினார். இறந்து போன மூவருக்கும் இறுதிச் சடங்குகள் செய்ய பேரூர் சென்று காரியத்தை முடித்து விட்டு தனது தம்பி வீட்டில் தங்கிய பரமானந்தம், கடந்த 4 ம் தேதி வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீட்டில் உள்ள பொருட்கள் திருடப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

  பீரோ உடைக்கப்பட்டு 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 39 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மோப்பநாய் மூலம் கண்டுபிடிக்காமல் இருக்க மிளகாய் பொடியை கொள்ளையர்கள் வீடு முழுவதும் தூவியிருந்தனர். பரமானந்தத்தின் புகாரின் பேரில், பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  மேலும் படிக்க... முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திக்க இருக்கும் சவால்கள் என்ன ?  தனது தாய், மனைவி, மகன் உயிரிழந்த பெரும் துக்கத்தில் இருந்த பரமானந்தத்திற்கு வீடு கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் சொல்லொணாத மனவேதனையை அளித்துள்ளது. மனிதநேயம் மரித்துப் போய் விட்டதா என்ற கேள்வியை இந்த சம்பவம் எழுப்பியுள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: