உடுமலை பகுதியில் தங்கச்செயினை பறித்துக்கொண்டு காரை திருடி தப்பிய நான்கு பேரை விரட்டிப் பிடித்த காவல்துறையினர் குற்றவாளிகளின் காரை காவல்துறை வாகனம் துரத்தும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவல்,
பொள்ளாச்சி அருகே உள்ள மாமரத்துபட்டி பகுதியை சேர்ந்தவர் சேகர். இவர் தனது நான்கு சக்கர வாகனமான மாருதி 800 காரை விற்பனை செய்யப்போவதாக தெரிவித்துள்ளார். இந்த காரை வாங்க ஒரு சில நபர்கள் விலை பேசியுள்ளனர். காரை வாங்க அதன் ஆவணங்களை பெற்று பணம் கொடுப்பதாக கூறி தேவனூர் புதூர் பகுதியில் உல்லாச நகர் பகுதிக்கு வர சொல்லி உள்ளனர்.
பணத்தை வாங்கிக்கொண்டு காரை விற்க அங்கு சேகர் வந்துள்ளார். அப்பொழுது கார் வாங்குவதாக கூறிவந்த நான்கு நபர்கள் சேகர் கழுத்தில் அணிந்திருந்த 3.1/2 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு அவரை கீழே தள்ளிவிட்டு அந்தக் காரையும் திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பிவிட்டனர்.
இதனைத் தொடர்ந்து சேகர் உடுமலை அருகே உள்ள தளி காவல் நிலையத்திற்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து பொள்ளாச்சி பழனி உடுமலை வட்டங்களில் உள்ள காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, இந்த தகவல் கிடைத்து அனைத்துப் பகுதி காவல்துறை ரோந்து வாகனங்களும் சாலையில் வரும் வாகனங்களை கண்காணிக்கத் தொடங்கினர்.
அப்பொழுது இவர்கள் திருடிய கார் பொள்ளாச்சி அருகே திப்பம்பட்டி பகுதியில் சென்று கொண்டிருப்பதை நெடுஞ்சாலை ரோந்து பணி காவலர்கள் கவணித்துள்ளனர். இதன்பின் அவர்களை விரட்டிப் பிடிக்க முயன்றுள்ளனர். ஆனால் அந்த காரை திருடிய நபர்கள் காவல்துறையிடம் சிக்காமல் தப்பிக்க வாகனத்தை வேகமாக ஓட்டி உள்ளனர். பல கிலோமீட்டர் துரத்தி சென்ற நெடுஞ்சாலைத்துறை ரோந்து பணி போலிசார் பொள்ளாச்சி அருகே இந்த காரை மடக்கிப்பிடித்து குற்றவாளிகளை கைது செய்து தளி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அதன்பின் தளி காவல் நிலையத்தில் நடந்த விசாரணையில் காரை திருடி செயினை பறித்தது தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ராபின்ராஜ், அருள்ராஜ், சேவாக்மரிய மற்றும் அபின் என்பது தெரியவந்துள்ளது.இதனையடுத்து குற்றவாளிகள் 4 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் காவல்துறையிடம் சிக்காமல் தப்பிக்க காரை விரட்டிச் சென்ற காட்சிகளை ரோந்து பணியில் இருந்த காவலர்கள் செல்போனில் படம் பிடித்துள்ளனர். அந்த காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர்: ம.சக்திவேல் (பொள்ளாச்சி)
Published by:Ramprasath H
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.