மாணவ மாணவிகளின் தொடர் தர்ணா போராட்டம் எதிரொலியாக அரசு வனக்கல்லூரியின் பட்டுப்புழுவியல்துறைக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கல்வியாண்டிற்கான பட்டுப்புழுவியல்துறை மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டது தொடர்பாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. விடுதி பூட்டப்பட்டாலும் கல்லூரியை விட்டு வெளியேற மறுத்து போராட்டத்தை தொடருகின்றனர் மாணவர்கள்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள அரசு வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இயங்கி வரும் பட்டுப்புழுவியல்துறைக்கு காலவரையற்ற விடுமுறை அறிவித்து இத்துறை சார்ந்த மாணவ மாணவிகள் கல்லூரியில் இருந்து உடனடியாக வெளியேற கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
பட்டுப்புழுவியல்துறை பட்டப்படிப்பு 2011 ம் ஆண்டு கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் துவக்கப்பட்டது. பின்னர் 2014 ம் ஆண்டில் இத்துறை இப்பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. துறையாக இயங்கும் பட்டுப்புழுவியல் துறையை கல்லூரியாக தரம் உயர்த்தவே இந்த மாற்றம் செய்யப்படுவதாக அப்போது தெரிவிக்கப்பட்டது.
அதற்கான பணிகளும் நடைபெற்று வந்த நிலையில், 2021 – 2022 ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையில் இளநிலை அறிவியல் (B.sc sericulture) படிப்பான பட்டுப்புழுவியல் படிப்பு இடம்பெறவில்லை. இதனால் இத்துறையின் கீழ் பயின்று வரும் மாணவ மாணவிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். நிர்வாக வசதிக்காக தற்காலிகமாக இரு ஆண்டுகளுக்கு இத்துறை சார்ந்த மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டுள்ளது என பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டாலும் தங்கள் துறை சார்ந்த படிப்புகள் ஒட்டுமொத்தமாக முடக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் தவித்தனர் இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டபடிப்பு பயின்று வரும் பட்டுப்புழுவியல்துறை மாணவ மாணவிகள்.
இதனால் தங்களின் எதிர்க்காலம் குறித்த கேள்விக்குறியோடு இத்துறையின் கீழ் பயிலும் மாணவ மாணவிகள் 77 பேர் கடந்த எட்டாம் தேதி காலை முதல் கல்லூரி வளாகத்தினுள் உள்ள பட்டுப்புழுவியல்துறை கட்டிடத்தின் முன்பு அமர்ந்து இவ்வாண்டு விடுபட்டுள்ள மாணவர் சேர்க்கையில் மீண்டும் பட்டுப்புழுவியல் துறையை இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட துவங்கினர்.
வகுப்புகளை புறக்கணித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்பட்ட பலகட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடித்து நான்காம் நாளாக போராட்டம் தொடர்ந்தது. இந்நிலையில், தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தின் இயக்குனர்கள் குழு மாணவர்களிடம் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. இதுவும் தோல்வியில் முடிந்ததையடுத்து வனக்கல்லூரியில் செயல்பட்டு வரும் பட்டுப்புழுவியல்துறைக்கு மட்டும் காலவரையற்ற விடுமறை அறிவித்த கல்லூரி நிர்வாகம், இத்துறை மாணவ மாணவிகள் தங்கியிருந்த விடுதி அறைகளை காலி செய்து விட்டு உடனடியாக கல்லூரியை விட்டு வெளியேற உத்தரவிட்டது.
ஆனால், கல்லூரியை விட்டு வெளியேற மறுத்த மாணவர்கள் விடுதி அறையில் இருந்து தங்களது உடமைகளை எடுத்துக்கொண்டு மீண்டும் அதே இடத்தில் அமர்ந்து தங்களது தர்ணா போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால் கல்லூரிக்குள் பரபரப்பான சூழல் நிலவ துவங்கியது. கல்லூரி முதல்வர் பார்த்திபன், கோட்டாச்சியர் லீலா அலெக்ஸ், மேட்டுப்பாளையம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜெய்சிங், வட்டாச்சியர் ஷர்மிலா உள்ளிட்டோர் மாணவ மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி அமைதியான முறையில் அனைவரும் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல வலியுறுத்தினர்.
ஆனால் அதனை ஏற்க மறுத்த மாணவ மாணவிகள் தங்களது போராட்டத்தை கல்லூரிக்குள் தொடர்கின்றனர். வனத்தை ஒட்டி அமைந்துள்ள வனக்கல்லூரி வளாகத்தினுள் உள்ள அலுவல் கட்டிடத்தின் வெளியே இரவு நேரத்தில் மாணவ மாணவிகள் அமர்ந்துள்ளதால் அவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
செய்தியாளர் : எஸ் .யோகேஷ்வரன், மேட்டுப்பாளையம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore, College student, Mettupalayam