Home /News /tamil-nadu /

கோவையில் சுற்றித் திரியும் தெருநாய்கள்.. செயலி மூலம் கணக்கெடுக்கும் பணியில் மாநகராட்சி..!

கோவையில் சுற்றித் திரியும் தெருநாய்கள்.. செயலி மூலம் கணக்கெடுக்கும் பணியில் மாநகராட்சி..!

கோவையில் சுற்றித் திரியும் தெருநாய்கள்.. செயலி மூலம் கணக்கெடுக்கும் பணியில் மாநகராட்சி..!

கோவையில் சுற்றித் திரியும் தெருநாய்கள்.. செயலி மூலம் கணக்கெடுக்கும் பணியில் மாநகராட்சி..!

சாலைகளில் சுற்றித் திரியும் தெருநாய்களை சர்வே செய்து அதற்கு கருத்தடை சிகிச்சை கொடுக்கும் முயற்சி கிழக்கு மண்டலத்தில் துவங்கப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

    கோவையில் அதிகரித்து வரும் தெருநாய்களை கணக்கெடுத்து அதன் எண்ணிக்கையை கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பில் தொண்டு நிறுவனத்தின் துணையுடன் புது முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    கோவையில் தெருநாய்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. போதுமான கருத்தடை செய்வதில் தடைகள் உள்ளதாலும் அதிகரித்துவரும் தெருநாய்களை கண்காணிப்பதில் உள்ள சிக்கல்களாளும் பொதுமக்களுக்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது.

    கோவையில் தெரு நாய்கள் குடியிருப்புப் பகுதிகளில் மட்டுமல்லாமல் மக்கள் அதிகம் கூடும் இடங்களான பந்தய சாலை, கோவை அரசு மருத்துவமனை, பேருந்து நிலையங்கள் போன்றவற்றிலும் வலம் வருகிறது. இந்த நிலையில் நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த கோவை மாநகராட்சி புது முயற்சி எடுத்துள்ளது. இதில் தெருநாய்களை கண்காணித்து கணக்கெடுத்து அதன்மூலம் கருத்தடை சிகிச்சை செய்து நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த "டாக் ஆஃப் கோயம்புத்தூர்" என்ற தனியார் அறக்கட்டளை உதவியுடன் கண்காணிப்பு பணி துவங்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுங்கரா கூறும் போது, கோவையில் லட்சக்கணக்கான நாய்கள் உள்ளன. அதை சரியாக கணக்கீடு செய்ய முடியவில்லை. இந்தநிலையில் சாலைகளில் சுற்றித் திரியும் தெருநாய்களை சர்வே செய்து அதற்கு கருத்தடை சிகிச்சை கொடுக்கும் முயற்சி கிழக்கு மண்டலத்தில் துவங்கப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து மண்டலங்களிலும் கணக்கெடுப்பு பணி துவங்கப்படும். 3 மற்றும் 4 ஆண்டுகளில் நாய்களால் ஏற்படும் பிரச்சினைகள் சரி செய்யப்படும் என தெரிவித்தார்.

    கோவை மாநகராட்சி எல்லையில் சாலையில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து கருத்தடை செய்ய கோவை மாநகராட்சியில் ஏற்கனவே இரண்டு மையங்கள் உள்ளன. ஆனால் அந்த மையங்களில் போதுமான அளவிற்கு கருத்தடை சிகிச்சைகள் செய்யப்படுவதில்லை. எனவே கருத்தடை சிகிச்சையை அதிகரித்து நாய்களை கண்காணித்து மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க மாநகராட்சி சார்பில் தீவிரம் காட்டப்பட்டு வருவதாக கால்நடை மருத்துவர் தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து உயிரியல் பூங்கா இயக்குனர் செந்தில்நாதன் கூறும் போது, நாய்களால் மக்களுக்கு பிரச்சினைகள் ஏற்படுகிறது. இதை சரிசெய்ய தற்போது டேட்டா எடுக்கப்படுகிறது. இதன் மூலம் விலங்கு நல வாரியத்தின் அறிவுறுத்தலின்படி நாய்களை பிடித்து கருத்தடை செய்து தடுப்பூசி செலுத்தி அதே இடத்தில் விடப்படும். மாதம் கோவை மாநகராட்சியில் 2 மையங்களில் 250 தெரு நாய்களுக்கு கருத்தடைகள் செய்து வரும் நிலையில் கணக்கெடுப்புக்கு பின் முறைப்படுத்தப்பட்டு கருத்தடை அதிகரிக்கப்படும் என்றார்.

    இப்படி டாக் ஆப் கோயம்புத்தூர் என்ற தனியார் அறக்கட்டளையினர் மாநகராட்சி துணையுடன் ஒவ்வொரு சாலையிலும், குடியிருப்புகளிலும், பொது இடங்களிலும் வார்டு வாரியாக நாய்களை கணக்கெடுப்பு செய்து புகைப்படம் எடுத்து அதற்கென்று உருவாக்கப்பட்டுள்ள பிரத்தியேக செயலியில் நாயின் அடையாளம் குறித்த விவரங்களை பதிவிடுவர். பின்னர் இந்த விவரங்கள் அடிப்படையில் நிதி ஒதுக்கி கருத்தடை செய்து முறை படுத்தப்படும் என தனியார் அறக்கட்டளையினர் தெரிவிக்கின்றனர்.



    இது குறித்த இந்த அறக்கட்டளை நிர்வாகி கேசிகா கூறும்பொழுது...

    நாய்களின் பிறப்பை கட்டுப்படுத்த கருத்தடை முக்கியம். அதை முன்னெடுக்கும் விதமாக முதற்கட்டமாக கிழக்கு மண்டலத்தில் நாய்களின் கணக்கெடுப்பை தொடங்கியுள்ளோம்.
    முதல்கட்டமாக கிழக்கு மண்டலத்தில் உள்ள 10 வார்டுகளில் கணக்கெடுப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. ரேபிஸ் நோயை கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளோம். நாய்களையும் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறோம்.

    சுமாராக ஒரு வார்டில் நூறு நாய்கள் வரை பார்க்கிறோம். ஆனால் அதைவிட அதிகமாகவே நாய்கள் உள்ளது. இதற்காக பிரத்யேக அப்ளிகேஷன் மூலம் நாய்களை அடையாளப்படுத்தும் விதமாக 10 கேள்விகளை பூர்த்தி செய்து சர்வே நடத்தி வருகிறோம். இதில் 20 தன்னார்வலர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் பிரச்சனை சரி செய்யப்படும் என தெரிவித்தார்.

    செய்தியாளர் - ஜெரால்ட்,  கோவை.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Coimbatore, Dog

    அடுத்த செய்தி