மக்கள் நலனுக்காக எந்தக் கொள்கை பிடிப்பும் இல்லாத சீமான் காங்கிரஸ் கட்சியை பற்றி விமர்சிக்க அருகதை இல்லை சிவகங்கை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் கூறியுள்ளார்.
பொள்ளாச்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சிவகங்கை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் கலந்துகொண்டு நிர்வாகிகளிடம் பேசினார் பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியின்போது, “ சீமான் மற்ற அரசியல் கட்சித் தலைவர்களைப் பற்றியும் குறிப்பாக காங்கிரஸ் கட்சித் தலைவர்களை பற்றி கொச்சையாக பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். எந்தக் கொள்கை பிடிப்பும் இல்லாத சீமான் இளைஞர்கள் மத்தியில் கோபத்தை தூண்டிவிட்டு சொற்ப வாக்குகளை பெறுகிறாரே தவிர தமிழக மக்கள் நலனுக்கான திட்டங்களை வைத்து நடத்தும் அரசியல் கட்சி கிடையாது. அது ஒரு பிரின்ஸ் -அவுட்- புட் கட்சி.
அரசியல் ரீதியாக விமர்சனம் வைப்பதை ஏற்றுக் கொள்கிறோம். காங்கிரஸ் தலைவர்களை பற்றி விமர்சிப்பது கண்டனத்துக்குரியது. இதுபோன்ற பேச்சுக்களால் அவரது தரத்தை அவரே குறைத்துக் கொள்கிறார். அவருக்கு உண்மையான தண்டனை என்பது வரும் காலங்களில் அவர் கட்சிக்கு கிடைக்கும் சொற்ப வாக்குகள் கூட கிடைக்காது தமிழக மக்கள் நிராகரிப்பார்கள்.
திமுக இந்து மதத்துக்கு எதிரான கட்சி என்று பாஜக தொடர்ந்து விமர்சிப்பது கண்டிக்கத்தக்கது. தொற்று பாதிப்பு அதிகம் உள்ளதால் கோயில்கள் மூடப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு குறைந்ததும் கோயில்களை திறக்க முதல்வர் நடவடிக்கை எடுப்பார். தமிழகத்தில் பாஜகவை மக்கள் விரும்பத்தகாத கட்சியாக தான் பார்க்கிறார்கள். இந்துத்துவா கொள்கையை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்வது கிடையாது பாஜகவின் அரசியல் தமிழகத்தில் எடுபடாது.தெய்வ பக்தி என்பது பாஜகவினருக்கு மட்டும் கிடையாது அனைத்து தரப்பு மக்களுக்கும் உண்டு பாஜக நிராகரிக்கப்பட வேண்டிய கட்சி என்று விமர்சித்தார்.
7 தமிழர்கள் விடுதலை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்டு தண்டிக்கப்பட்ட 7 பேருக்கு மட்டும் தனி சலுகை, பரிந்துரை என்பதை காங்கிரஸ் கட்சி ஏற்றுக்கொள்ளாது. பொதுவான சட்ட திருத்தம் கொண்டு வந்து பொதுமன்னிப்பு என்று தந்தால் தடுக்க மாட்டோம் மாறாக தனி சலுகை, தனி பரிந்துரை என்பதை நேரு ,இந்திரா, ராஜீவ் மீது பற்றுள்ள காங்கிரஸ் கட்சியினர் ஏற்றுக் கொள்ள மாட்டார் என்று தெரிவித்த கார்த்திக் சிதம்பரம் நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று தெரிவித்தார்.
செய்தியாளர்: ம.சக்திவேல் (பொள்ளாச்சி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Congress, Karthi chidambaram, Naam Tamilar katchi, News On Instagram, Politics, Seeman, TamilNadu Politics