Home /News /tamil-nadu /

இரிடியம் வாங்க ரூ.30 லட்சத்துடன் வந்த நபர்... போலீசார் என்று கூறி கொள்ளை - கோவையில் 3 பேர் கைது

இரிடியம் வாங்க ரூ.30 லட்சத்துடன் வந்த நபர்... போலீசார் என்று கூறி கொள்ளை - கோவையில் 3 பேர் கைது

போலீசார் என்று கூறி கொள்ளை

போலீசார் என்று கூறி கொள்ளை

Coimbatore : கோவையில் இரிடியம் வாங்க வந்த நபரிடம் 30 லட்சம் ரூபாயை போலீசார் எனக்கூறி கொள்ளையடித்து சென்ற மூன்று பேரை கைது செய்துள்ள போலீசார் அவர்களிடமிருந்து 7.5 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர்.

    தேனி மாவட்டத்தை சேர்ந்த மனோகரன் என்பவரை அழைத்த கோவையைச் சேர்ந்த நபர் ஒருவர், இரிடியம் இருப்பதாகவும், விலை மதிப்புமிக்க இந்த இரிடியத்தை வாங்க 30 லட்சத்துடன் கோவை வருமாறும் கூறியுள்ளார். இதனை நம்பி, மனோகரன் 30 லட்சம் ரூபாய் பணத்துடன் தனது கார் ஓட்டுனர் வேலு என்பவருடன் கடந்த ஏப்ரல் 18ம் தேதி கோவை வந்து சிங்கநல்லூர் பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் தங்கியுள்ளார்.

    மாலை 7 மணியளவில் மனோகரன் தங்கியிருந்த அறைக்கு வந்த 2 மர்ம நபர்கள், தாங்கள் காவல்துறையை சேர்ந்தவர்கள் எனக்கூறி மனோகரனை மிரட்டியதோடு, அவரிடமிருந்து 30 லட்சம் ரூபாயை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். சுதாரித்துக் கொண்ட மனோகரன், இது தொடர்பாக சிங்காநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தொடர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்தேகத்தின் பேரில் ஓட்டுனர் வேலுவிடம் விசாரணை நடத்தினர். முதலில் முன்னுக்கு பின் முரணாக பேசிய வேலு, பின்னர் தனது நண்பர்களுடன் சேர்ந்து பணத்தை கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

    வேலு, தனது நண்பர்களான தேனியை சேர்ந்த நிர்மல்செல்வன் மற்றும் வினோத்குமார் ஆகியோருடன் சேர்ந்து பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளார். இதன்படி அன்று மாலை வேலு, வெளியே சென்ற போது, மனோகரன் தனியாக இருக்கும் தகவலை கூட்டாளிகளுக்கு தெரிவித்துள்ளார். இதையடுத்து அங்கு வந்த இருவரும் மனோகரனை மிரட்டி, பணத்தை பறித்து சென்றது விசாரணையில் தெரியவந்தது.

    Must Read : தருமபுரம் ஆதினத்தை தோளில் சுமக்க நானே நேரில் செல்வேன் - அண்ணாமலை

    இதையடுத்து, வேலு உட்பட மூவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 7.5 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்து, மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனிடையே, கொள்ளை நடந்த அன்று கொள்ளையர்கள் இருவரும், விடுதிக்கு வந்து செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

    செய்தியாளர் - ஜெரால்ட், கோவை.
    Published by:Suresh V
    First published:

    Tags: Coimbatore, Crime News, Iridium, Robbery

    அடுத்த செய்தி