தமிழகத்தில் கோடை வெப்பம் வாட்டி எடுத்து வரும் நிலையில் கடந்த சில தினங்களாக
கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மின்வெட்டு ஏற்பட்டு வருகின்றது. குறிப்பாக கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் இரவு நேரங்களில் மின் வெட்டு ஏற்பட்டு வருகின்றது.
அதன்படி, கோவில்பாளையம், குரும்பபாளையம், பெத்தநாயக்கன்பாளையம், கள்ளிபாளையம் உள்ளிட்ட கோவை புறநகர் பகுதிகளில் இரவு நேரங்களில் அடிக்கடி மின் வெட்டு ஏற்பட்டு வருகின்றது. இதனால் மக்கள புழுக்கம் தாங்க முடியாமல், கொசு கடியில் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மாணவர்கள் இரவு நேரங்களில் படிக்க முடியாத நிலையும் ஏற்பட்டது. மின் வெட்டு காரணமாக பொது மக்கள் தங்கள் வீட்டில் மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்து அந்த வெளிச்சம் மூலம் உணவு சமைத்தனர். இதேபோல, பள்ளி மாணவர்களும் பாடம் படித்தனர். கடந்த சில தினங்களாக நிலவும் இந்த மின் வெட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம், பாலக்கோடு, கடத்தூர், பாப்பிரெட்டிப்பட்டி, வெங்கட சமுத்திரம், பூனையானூர், உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும் அறிவிக்கப்படாத மின் வெட்டு தொடருவதாக புகார் எழுந்துள்ளது. இரவு நேரங்களில் மின் வெட்டு காரணமாக பள்ளி மாணவர்கள் படிக்க முடியாமல் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
Must Read : கோடநாடு வழக்கு... 100க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு சசிகலா பதில் - இன்றும் விசாரணை
இதேபோல, கரூர் மாவட்டத்தில் 2வது நாளாக அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடர்வதால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். கரூர் மாவட்டத்தில் மாநகராட்சியை பகுதியை தவிர மற்ற கிராமப் புறங்களில் அய்யர்மலை, மாயனூர், வல்லம் மின் நிலையத்தில் இருந்து வரும் பகுதிகளான சுற்றுவட்டார கிராம பகுதிகளில் இரண்டாவது நாளாக மின்வெட்டு தொடர்ந்தது.
இந்நிலையில், நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக, நாட்டின் பெரும்பாலான மாநிலங்களிலும் 8 மணிநேரம் அளவுக்கு மின் தடை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.