பொள்ளாச்சி அருகே நூற்றுக்கணக்கான மரங்களை நட்டு பசுமைப் புரட்சியை ஏற்படுத்தியுள்ள காவல் நிலையத்தை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் என்று அரசு பொது மக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது, ஆனால் ஒரு புறம் சாலை விரிவாக்கம் என்ற பெயரில் பழமை வாய்ந்த மரங்களை அரசாங்கமே வெட்டி சாய்த்து வருகிறது.
எனினும், பல்வேறு தன்னார்வ நிறுவனங்களும், அரசாங்கமும் மரம் வளர்ப்பதை பற்றி தொடர்ந்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இந்த சூழ்நிலையில் பொள்ளாச்சி அருகேயுள்ள கோமங்கலம்புதூர் காவல் நிலையம் காவலர்கள் அனைவருக்கும் முன்மாதிரியாக நூற்றுக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு பசுமைப்புரட்சியை ஏற்படுத்தியுள்ளனர்.
காவல் நிலையம் அருகே முக்கால் ஏக்கர் நிலம் இருந்தது. அதில் வழக்குகளில் சிக்கும் வாகனங்களை நிறுத்தி வைத்திருந்தனர், பல ஆண்டுகளாக பராமரிப்பில்லாத இருந்த அந்த இடத்தை தற்போது காவலர்களின் முயற்சியில் தென்னை, மாமரம், பலாமரம், நாவல், புங்கன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான மரங்களை நட்டு வைத்துள்ளனர்.
காவலர்களுக்கு பணிச்சுமை இருந்தாலும் இந்த மரங்களுக்கு தினசரி தண்ணீர் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் சொட்டுநீர் பாசனம் மூலம் தண்ணீர் பாய்ச்சி பராமரித்து வருகின்றனர். காவலர்களின் இந்த மரம் வளர்க்கும் முயற்சியை கண்டு அப்பகுதி கிராம மக்கள் வியப்படைந்து பாராட்டி வருகின்றனர்.
தற்போது கொரோனா வைரஸ் என்ற கொடிய நோயினால் வாழ்வா? சாவா? என்ற போராட்டத்தை மக்கள் சந்தித்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கான காரணத்தை ஆராய்ந்தால் இயற்கை சார்ந்த விஷயங்களில் மனிதகுலம் எதிர்வினையாற்றியது தான். மூலிகை, மரம் ,செடி இல்லாமல் போனதும், இயற்கை மரங்களை சுவாசிக்க முடியாமல் போனதும், எங்கு பார்த்தாலும் கான்கிரீட் காடுகளை உருவாக்கியது இவையெல்லாம் மனிதகுலத்திற்கு பேரிடர் ஆனது.
எல்லாவற்றையும் விலைக்கு வாங்கும் மனிதன் தற்போது ஆக்சிஜன் தேவைப்பட்டாலும் விலை கொடுத்தாலும் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் எதிர்காலத்தில் மரங்கள் நடுவது ஒன்று தான் மக்களுக்கு நல்ல சுவாசத்தை கொடுக்கும் என்றால் மிகையாகாது. இதற்கு முன்னுதாரணமாக விளங்கும் காவலர்களின் இந்த முயற்சி பாராட்டுதலுக்குறியது.
செய்தியாளர் - ம.சக்திவேல்
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore, Pollachi