உக்ரைனில் ரஷ்யா நடத்திவரும் தாக்குதல் காரணமாக பதற்றமான சூழல் நிலவிவருகிறது. பதுங்குக் குழியில் பதுங்கியுள்ள தமிழக மாணவி எப்போதும் வெடிகுண்டு சத்தம் கேட்பதாகவும் கழிவறை வசதி இல்லாமல் அவதிப்படுவதாக தனது பெற்றோரிடம் வீடியோ காலில் தெரிவித்தார். மத்திய, மாநில அரசுகள் தங்களது மகளை மீட்க வேண்டும் என மாணவியின் பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.
கோவை தொண்டாமுத்தூர் அடுத்த குறிஞ்சி நகர்பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் கோவில் அர்ச்சகராக பணி புரிந்து வருகிறார். இவருடைய மகள் ஐஸ்வர்யா உக்ரைன் நாட்டில் உள்ள பெட்டரேமொகல்யா பிளாக் தேசிய பல்கலைக்கழகத்தில் நான்காம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார். தற்போது உக்ரைன் நாட்டில் போர் நடைபெற்று வரும் நிலையில் போர் நடக்கும் இடத்தின் அருகே உள்ள பதுங்கு குழியில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மாணவி ஐஸ்வர்யா பதுங்கியுள்ளார்.
அவருடன் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் இந்திய மாணவ மாணவிகள் முன்னூறுக்கும் மேற்பட்டோர் இருப்பதால் எந்த நேரத்திலும் தங்களுக்கு அபாயம் ஏற்படலாம் என்று மாணவி தனது தந்தைக்கு வாட்ஸ்அப் மூலம் தெரிவித்துள்ளார். அதனால் மிகுந்த அச்சத்தில் அவருடைய குடும்பம் இருந்து வருகிறது. உடனடியாக தமிழக அரசு மற்றும் மத்திய அரசு இணைந்து அங்கு அபாய கட்டத்தில் உள்ள தன்னுடைய மகளை உடனடியாக காப்பாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
இதையும் படிங்க: பைலட் கனவிற்காக அமெரிக்க வேலையை உதறிய மஹிமா: ஹெலிகாப்டர் விபத்தில் பலியான சென்னை பெண்ணின் நெகிழ்ச்சி கதை
உக்ரைன் சூழல் குறித்து தனது தந்தையிடம் வீடியோ காலில் பேசிய மாணவி, தற்போது போர் உக்கிரம் அடைந்து வருகிறது. அதனால் இந்திய தூதரகம் சார்பில் மேற்குப்பகுதியில் உள்ள இந்திய மாணவ மாணவிகளுக்கு மட்டும் தகவல் அளிக்கப்பட்டு மீட்கப்பட்டு வருகின்றனர். தெற்குப் பகுதியில் உள்ள மருத்துவ மாணவ மாணவிகளை இந்திய அரசு இன்னும் மீட்கவில்லை என்று தெரிவித்தார்.
மேலும், ’நாங்கள் பொருட்கள் வாங்கிகொண்டிருந்த கடை மீது தற்போது வெடிகுண்டு போடப்பட்டுள்ளது. கால் பேசுவதற்கு முன்பு கூட வெடிகுண்டு சத்தம் கேட்டது. பதுங்குக்குழியில் கழிவறை வசதி கூட இல்லை. ஆண்கள், பெண்கள் அனைவரும் ஒரே அறையை பயன்படுத்தி வருகின்றோம். தண்ணீர் வசதி இல்லை, 2 நாட்களுக்கு மட்டுமே உணவு உள்ளது. இங்கு சாலைகளே இல்லை’ என்று தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.