முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஊட்டி மலை ரயில் போக்குவரத்து ரத்து - சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

ஊட்டி மலை ரயில் போக்குவரத்து ரத்து - சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

ஊட்டி மலை ரயில்

ஊட்டி மலை ரயில்

மேட்டுப்பாளையம் முதல் உதகை வரையிலான மலைரயில் போக்குவரத்து இன்று ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

கனமழை காரணமாக மலை ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டதால் மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த நீலகிரி மலைரயில் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் ரயில்நிலையத்தில் இருந்து உதகைக்கு தினசரி இயக்கப்பட்டு வருகிறது. உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும் ஈர்க்கும் இம்மலை ரயில் இன்று காலை வழக்கம் போல் மேட்டுப்பாளையம் ரயில்நிலையத்தில் இருந்து காலை 7.10 மணிக்கு உதகை நோக்கி புறப்பட்டு சென்றது. ஆனால் அடர்லி மற்றும் ஹில்குரோவ் ரயில் நிலையங்களுக்கு இடையே மலைரயில் கடந்து செல்லும் பல்சக்கர இருப்பு பாதையின் மீது மண்சரிவு ஏற்பட்டு பாறைகள் விழுந்து கிடப்பது குறித்து தகவல் கிடைத்ததும் மலைரயில் கல்லார் ரயில்நிலையம் அருகே நிறுத்தப்பட்டது.

நேற்றிரவு மலைப்பகுதியில் பெய்த கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக மண் மற்றும் பாறைகள் சரிந்துள்ளது. மண் சரிவு ஏற்பட்டதில் மண் மற்றும் பாறைகள் சரிந்து  மலைரயில் இருப்பாதை மூடப்பட்டதோடு தண்டவாளங்களும் சேதமடைந்துள்ளது. மேற்கொண்டு பயணிக்க வழியில்லை என்பதால் மலைரயிலில் பயணித்த சுற்றுலா பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யபட்டன. மேலும், இன்று மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியிட்ட ரயில்வே நிர்வாகம் மண் சரிவுகளை சீரமைக்கும் பணியில் இறங்கியுள்ளது.

முப்பதிற்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் இருப்பு பாதையில் விழுந்துள்ள பாறைகள் மற்றும் சகதிகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று மாலைக்குள் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்து சேதமடைந்த இருப்பு பாதைகள் சரி செய்யப்பட்டால் மட்டுமே நாளை வழக்கம் போல் மலைரயில் இயக்கப்படும் என தெரிகிறது.

செய்தியாளர் -  எஸ்.யோகேஷ்வரன் (மேட்டுப்பாளையம்)

First published:

Tags: Mettupalayam, Nilgiris, Ooty, Train