அன்னூரில் பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சினையில் இளைஞர் ஒருவர் பட்டப்பகலில் ஓட, ஓட விரட்டி அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
கோவை மாவட்டம் அன்னூரை அடுத்துள்ள நாகம்மாபுதூர் பகுதியை சேர்ந்த சுந்தரம் என்பவரது மகன் சரவண சுந்தரம்(19). இவரும் பிள்ளையப்பம்பாளையம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் பகவான்ஜி (எ) தமிழ்ச்செல்வன்(26) ஆகியோரும் நண்பர்கள். தமிழ்செல்வன் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார்.
இந்நிலையில் சரவண சுந்தரத்திற்கும்,தமிழ்ச்செல்வத்திற்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கலில் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அன்னூரை அடுத்த மைல்கல் பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த சரவண சுந்தரத்தை, தமிழ்ச்செல்வன் மற்றும் அவரது நண்பரான ராஜராஜன் ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்தில் வந்து அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் சரவண சுந்தரத்தின் தலை மற்றும் இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.வலது கை மணிக்கட்டு துண்டிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் வெட்டிய இருவருக்குமே லேசான காயமும் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து அறிந்த அன்னூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயங்களுடன் கிடந்த சரவண சுந்தரத்தை மீட்டு கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .
இந்நிலையில் சரவண சுந்தரத்தை வெட்டிய தமிழ்ச்செல்வன், ராஜராஜன் உள்ளிட்ட இருவரும் நேரடியாக அன்னூர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். அப்போது சரவண சுந்தரம் தனது சக நண்பர்களுடன் மிரட்டலில் ஈடுபட்டதால் கொலை செய்ததாக தெரிவித்துள்ளனர்.இச்சம்பவம் குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை சம்பவத்தில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்தனர்.
பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் பட்டப்பகலில் இளைஞர் ஒருவரை ஓட ஓட விரட்டி கொலை செய்த சம்பவம் அன்னூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சரவண சுந்தரம் சமீபத்தில் இந்து முன்னணி அமைப்பில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்து இருப்பதும், தமிழ்செல்வனும்,ராஜராஜனும் தற்போது இந்து முன்னணி அமைப்பில் இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.