ஊட்டி மலை ரயில் போக்குவரத்து மேலும் பதினைந்து நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
உலக பாரம்பரிய சின்னமான நூற்றாண்டு பழமை வாய்ந்த நீலகிரி மலைரயில் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் ரயில்நிலையத்தில் இருந்து உதகைக்கு தினசரி இயக்கப்பட்டு வருகிறது. உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும் பெரிதும் கவரும் இம்மலை ரயில் மழை காலங்களில் இதன் பாதையில் ஏற்படும் மண் சரிவுகளால் சரிவர இயங்க இயலாமல் அடிக்கடி தடைபட்டு நிற்கிறது.
கடந்த மாதம் மட்டும் கனமழை காரணமாக ரயில் பாதையில் ஏற்பட்ட மண் சரிவுகளால் மூன்று முறை ரத்து செய்யப்பட்ட ரயில் போக்குவரத்து கடந்த 23 ம் தேதி அடர்லி மற்றும் ஹில்குரோவ் ரயில் நிலையங்களுக்கு இடையே ஏற்பட்ட பெரிய அளவிலான மண் சரிவுகளால் மீண்டும் முடங்கியது. மேலிருந்து உருண்டு விழுந்த ராட்சத பாறைகள் மலை ரயில் செல்ல வேண்டிய பல்சக்கர இருப்பு பாதையை துண்டித்து சேதமானது. இதனால் மறு அறிவிப்பு வரும் வரை மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையேயான நீலகிரி மலைரயில் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக அறிவித்த ரயில்வே நிர்வாகம் ரயில் பாதை சீரமைப்பு பணிகளை துவங்கியது.
மலைரயிலின் தண்டவாளப்பாதையில் உருண்டு கிடந்த பெரிய அளவிலான பாறைகள் வெடி வைத்து அகற்றப்பட்டு சேதமடைந்த இருப்பு பாதைகள் புதிதாக மாற்றப்பட்டன. மழை குறுக்கிட்டதால் சீரமைப்பு பணிகள் பாதிக்கப்பட்ட போதிலும் மண் சரிவுகள் சீரமைக்கப்பட்டன. ஆனாலும் இப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆங்காங்கே சிறிய அளவிலான மண் சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன. இதனை கருத்தில் கொண்ட ரயில்வே நிர்வாகம் மோசமான வானிலை காரணமாக வரும் 15.11.21 வரை மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. பண்டிகை மற்றும் விடுமுறை காலத்தில் மலைரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது சுற்றுலா பயணிகளிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்: எஸ். யோகேஷ்வரன் ( மேட்டுப்பாளையம்)
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.