• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மசினக்குடி புலிக்கு மன அழுத்தம்... மைசூருக்கு அனுப்பி வைப்பு

மசினக்குடி புலிக்கு மன அழுத்தம்... மைசூருக்கு அனுப்பி வைப்பு

புலி

புலி

நீண்ட தேடுதல் வேட்டைக்கு பின்னர் T23 புலியானது பிடிக்கப்பட்டு இருப்பது கூடலூர், மசினகுடி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

  • Share this:
T23 புலிக்கு  மன அழுத்தம்  ஏற்பட்டு இருப்பதுடன்,உடலில்  புண்கள் இருப்பதால்  வெகு  தூரம் அழைத்து செல்ல முடியாது என்பதால் மைசூருக்கு  உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்ல முடிவு செய்தாக தமிழக வனத்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

நீலகிரி மாவட்டம் முதுமலை வனப்பகுதியில் மனிதர்கள் மற்றும் கால்நடைகளை தொடர்ந்து தாக்கி கொன்ற T23 புலியை நேற்று வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.  21 நாட்களாக T23 புலியை பின் தொடர்ந்து  நேற்று பிற்பகல் மயக்க ஊசி செலுத்தப்பட்டது. புலியை பிடித்தவுடன் அதை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு  கொண்டு செல்ல முதலில்  திட்டமிடப்பட்டது. ஆனால் புலியை தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில் அதற்கு உடலில் காயங்கள் இருப்பது தெரியவந்ததால் புலியை பிடித்த பின்னர் மருத்துவகுழு அறிவுறுத்தல்படி அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்வது என முடிவு செய்து இருப்பதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் 21 நாட்களுக்கு பின்னர் நேற்று T23 புலியானது மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. இதனையடுத்து புலியை மைசூரில் உள்ள வன உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகள் மீட்பு மையத்திற்கு கொண்டு செல்ல அதிகாரிகள் முடிவு செய்தனர்.
T23 புலியை மைசூரில் உள்ள விலங்குகள் மீட்பு மையத்திற்கு கொண்டு செல்ல தேசிய புலிகள் ஆணையத்திடம் ஆலோசனை செய்த பின்பே முடிவு செய்ததாக   தமிழக வனத்துறை செயலாளர் சுப்ரியாசாகு தெரிவித்தார்.

வனத்தில் 21 நாட்களாக T23 புலியை பின் தொடர்ந்து தேடுதல் நடத்தியதால் புலிக்கு மன அழுத்தம் ஏற்பட்டு  இருந்தது எனவும், பிற புலிகளுடன் சண்டையிட்டதால்  புண்கள் அதிகம் இருந்ததாலும் புலியை  வெகு  தூரம் அழைத்து செல்ல முடியாது என்பதால் மைசூர் கொண்டு செல்லப்படுவதாக தெரிவித்தார். புலி நல்ல உடல் நலத்துடன் இருக்கின்றது எனவும்,மைசூரில் புலிக்கு நல்ல சிகிச்சை கொடுக்க முடியும் என்பதால் புலி சீக்கிரம் குணமடையும் என நம்பிக்கை தெரிவித்தார்.சிகிச்சை முடிந்த பின் 10 நாட்கள் கழித்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் எனவும் வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு தெரிவித்தார்.

T23 புலியை பிடிக்கும் பணியில் 21 நாட்களாக 100 ஊழியர்கள்  பணி புரிந்தனர் எனவும் கும்கியானைகள , நாய்கள், டிரோன் கேமரா என அனைத்தும் பயன்படுத்தி அறிவியல் பூர்வமான முறையில் புலியை பிடிக்கும்  பணி கையாளப்பட்டது என தமிழக முதன்மை தலைமை  வனப்பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் தெரிவித்தார்.

மேலும் நேற்று புதர்கள்  குறைவாக இருக்கும் பகுதிக்கு புலி வந்த நிலையில் அதற்கு  மயக்க ஊசி செலுத்தப்பட்டது எனவும், புலி மயங்க சிறிது நேரம் ஆகும்  என்பதால் அதுவரை டிரோன் கேமரா மூலம் கண்காணித்தாகவும், புலி மயங்கிய பின்னர் இரண்டு மணிநேரம் அதை முழுமையாக பரிசோதனை செய்து மைசூர் மீட்பு மையத்திற்கு அனுப்ப முடிவு செய்தாகவும், நீலகிரி மாவட்டம் மசினகுடியில் இருந்து வண்டலூர் வரை  600 கி.மீ  புலியை கொண்டு செல்ல அதன் உடல் நிலை ஒத்துழைக்காது என்பதால் அருகில் உள்ள மைசூருக்கு  எடுத்து செல்ல முடிவு செய்தாகவும்,கர்நாடக வனத்துறையினரும் முழு ஒத்துழைப்பு அளித்து இருப்பதாகவும் தெரிவித்தார்.

புலியின் உடல் நிலை குறித்து அறிவியல் பூர்வமான ஆய்வுகள் வந்த பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும் எனவும், முதல் முறையாக பிரச்சினைக்குரிய புலியை உயிருடன்  பிடித்துள்ளோம் எனவும் வனத்துறை முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் தெரிவித்தார்.

நீண்ட தேடுதல் வேட்டைக்கு பின்னர் T23 புலியானது பிடிக்கப்பட்டு இருப்பது கூடலூர், மசினகுடி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே வேளையில் பிரச்சினைக்குரிய புலியை உயிருடன் பிடித்து இருப்பது வன ஆர்வலர்கள் மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 13 வயதான புலி வனத்தில் இளம்புலிகள் மத்தியில்  தன் ஆளுமையை நிரூபிக்க போராடும் நிலையில் இருந்த சூழலை மாற்றி கூண்டில் அடைத்து  இருப்பதன் மூலம் இன்னும் சில ஆண்டுகள் T23 புலி உயிருடன் இருக்கும் என்றாலும் அதன் வாழ்க்கை இரும்பு கூண்டு சிறைகளில் என்பது மட்டும் சோகம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Ramprasath H
First published: