Home /News /tamil-nadu /

கோட்சே பெயரைப் பயன்படுத்தக் கூடாதா?- கோவை காவல்துறைக்கு மார்க்ஸிஸ்ட் கண்டனம்

கோட்சே பெயரைப் பயன்படுத்தக் கூடாதா?- கோவை காவல்துறைக்கு மார்க்ஸிஸ்ட் கண்டனம்

ஜி.ராமகிருஷ்ணன்

ஜி.ராமகிருஷ்ணன்

காக்கி உடைக்குள் காவி உணர்வா என்று காவல்துறைக்கு மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

    மகாத்மா காந்தியின் நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது. டெல்லி ராஜ்காட்டிலுள்ள காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் மோடி இன்று அஞ்சலி செலுத்தினார். அதேபோல காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியும் காந்தியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அதேபோல, தமிழ்நாட்டில் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு கீழே வைக்கப்பட்ட காந்தி புகைப்படத்துக்கு மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    இந்தியா முழுவதும் அரசியல் கட்சித் தலைவர்கள் காந்திக்கு அஞ்சலி செலுத்தினார். கோயம்புத்தூரில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அப்போது, கோட்சேவுக்கு எதிராகவும், இந்து மதவெறிக்கு எதிராகவும் கோஷம் எழுப்பப்ட்டது. அப்போது, அங்கிருந்த காவல்துறை துணை ஆணையர் கோட்சே குறித்தும் இந்து மத வெறி எனவும் கோஷம் எழுப்புவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட ஜனவரி 30-ம் தேதி கோவை மாவட்ட மக்கள் ஒற்றுமை மேடையின் சார்பில் சிவானந்தா காலணியில், காந்தி நினைவு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் சி.பி.ஐ(எம்) அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பங்கேற்று உறுதிமொழி வாசித்துக் கொண்டிருந்தபோதே, ‘காந்தியை கொலை செய்தது கோட்சே’ என்கிற பகுதியை வாசிப்பதற்கு இடையூறாக மாநகர காவல்துறை துணை ஆணையரும், காவல்துறை ஆய்வாளரும் பாதியில் தடுத்தனர்.

    காந்தியை கொலை செய்தது கோட்சே என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. நீதிமன்றமே அவருக்கு தூக்குத் தண்டனை கொடுத்துள்ளது. காவல்துறை அந்த வாசகத்தை எதிர்த்து இடையூறு செய்வது சரியல்ல என்று ஜி.ராமகிருஷ்ணன் பலமுறை தெரிவித்தும் வாக்குவாதத்தை அதிகாரிகள் நிறுத்தவில்லை.


    நிகழ்ச்சி நடக்கும்போதே காவலர்கள் சென்று பாதியில் இடையூறு செய்தது மிகத் தவறான நடவடிக்கை. காந்தியை சுட்டுக் கொலை செய்தது கோட்சேதான் என்ற உண்மையை மறைப்பதற்கு காவல்துறை அதிகாரிகள் ஏன் முயற்சிக்க வேண்டும்?


    கோவை சம்பவம் குறித்து காவல்துறை உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். காவல்துறை மற்றும் அரசு நிர்வாகத்தில் உள்ள அனைவரும் மதச்சார்பற்ற கோட்பாடுகளை உறுதியாக கடைபிடிப்பதை தமிழக அரசு உறுதி செய்திட வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Coimbatore, Gandhi, Marxist Communist Party

    அடுத்த செய்தி