பிரதமரும், நிதி அமைச்சரும் பொறுப்பில் இருக்கும் வரை இந்தியாவில் விலைவாசி குறைய வாய்ப்பில்லை என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் சிவகங்கை மக்களவை தொகுதி உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்தியாவில் குறிப்பாக கர்நாடகாவில் நடைபெறும் நிகழ்வுகளை பார்க்கும்போது இந்தியாவிற்கு சமத்துவம் மிகவும் அவசியம் எனவும், மத்தியில் இருக்கும் பாஜக இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய இஸ்லாமியர்களை ஒடுக்க வேண்டும் என்பதற்கான எல்லா முயற்சிகளையும் எடுத்து வருகின்றது என தெரிவித்தார்.
குறிப்பாக பாபர் மசூதி தீர்ப்பு, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம், முத்தலாக் விவகாரம், குடியுரிமை திருத்த சட்டம் உள்ளிட்ட ஒவ்வொரு தருணத்திலும் இஸ்லாமிய மக்களை ஒடுக்க நினைக்கிறார்கள் எனவும், ஹிஜாப் அணிந்து கொண்டு பள்ளிக்கு, கல்லூரிக்கு செல்லக்கூடாது என தெரிவிக்கின்றனர் எனவும், இந்து கோவில்களில் பண்டிகைகள் நடைபெறும்போது ஹிந்து மக்களை சாராதவர்கள் கடை வைக்க கூடாது என அச்சுறுத்துவதாகவும் தெரிவித்தார்.
உத்திரபிரதேசத்திலும் பாஜக அரசியல் புல்டோசர் அரசாக உள்ளது எனவும் தெரிவித்தார். தமிழக முதலமைச்சர் அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாள் எனக் கூறுவதை முழுமையாக வரவேற்கிறேன் எனத் தெரிவித்த அவர், தற்போதைய மத்திய அரசு மற்றும் நிதியமைச்சர், பிரதமர் ஆகியோர் இருக்கும் வரை விலைவாசி குறையாது என்றும் தெரிவித்தார்.
பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால் மற்ற அனைத்து பொருட்களின் விலையும் உயரும், பொருளாதார சுமையை சாதாரண மக்கள் மீது, மத்திய அரசு சுமத்தி வருகின்றது எனக்கூறிய அவர், அத்தியாவசிய பொருட்கள் வாங்க சாதாரண மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள்.
பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்காமல் இருக்கும் வரை விலைவாசி குறையாது எனவும் தெரிவித்தார். கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்தபோதும் மத்திய அரசு விலையை குறைக்கவில்லை எனக்கூறிய அவர், ஏற்கனவே பல்வேறு நெருக்கடியை மத்திய அரசு கொடுத்துள்ளது எனவும், பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் எந்த நிதியையும் மத்திய அரசு கொடுக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
இதிலிருந்து மீண்டு வராத நிலையில் பெட்ரோல்,டீசல் வரி மூலம் இந்தியாவை பாதாளத்திற்கு தள்ளி விட்டனர் எனவும், பஞ்சு விலையில் 10 சதவீத இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
தற்போது உலகம் முழுவதும் பல்வேறு பிரச்சனைகள் சென்று கொண்டிருக்கும் நேரத்தில் வரியை குறைப்பது போன்ற செயல்களில் ஈடுபடாமல், இந்துத்துவாவை வளர்ப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர் எனவும், இஸ்லாமியர்களை ஒடுக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே இருப்பதால் மற்ற பிரச்சனைகளை பற்றி அவர்கள் சிந்திப்பதில்லை எனவும் தெரிவித்தார்.
தமிழக அரசு மகளிர் இலவச திட்டங்களை நிறுத்தியுள்ளது குறித்த கேள்விக்கு, புதிய அரசு அமைந்த பிறகு வந்த நிதியமைச்சர் ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட்டார், அதில் தற்போது மாநிலத்தில் இருக்கும் நிதிநிலைமை குறித்தும் தெரிவித்துள்ளார் எனவும், எல்லா நேரத்திலும் சலுகைகளை வழங்க முடியாது, இலவச திட்டங்களை சற்று குறைக்க வேண்டும் என்பது தான் அவர்களுக்கு வந்திருக்கும் ஆலோசனை என தெரிவித்தார்.
Also read... தமிழக ஒதுக்கீட்டில் மத்திய அரசின் பணிகளில் சேர்ந்த 367 வட மாநிலத்தவர்களின் போலி மதிப்பெண் சான்றிதழ்கள் கண்டுபிடிப்பு
அதேவேளையில் கல்வி கற்கும் மகளிருக்கு நிதி வழங்க உள்ள முடிவு இடைக்காலத்தில் கசப்பாக இருந்தாலும், இந்த முடிவு நன்றாக இருக்கும் என்பது என கருத்து என தெரிவித்தார்.
அதே போல ஈவிகேஎஸ் இளங்கோவன் தன்னை குழந்தை என்ற கருத்தையும், அடுத்த தலைவர் என்று கூறிய இரண்டு கருத்துகளையும் நான் ஏற்றுக் கொள்கிறேன் என தெரிவித்த அவர், காங்கிரஸ் கட்சியில் தலைவர்கள் அதிகம், தொண்டர்கள் குறைவு என்பது சோம்பேறித்தனமான விமர்சனம் எனவும், இந்தியா முழுவதும் பாஜகவிற்கு அடுத்து 19 முதல் 20 சதவீத வாக்குகளை வைத்திருக்கும் கட்சி காங்கிரஸ் கட்சி எனவும், பாஜக பிரதான கட்சி அதற்கடுத்ததாக காங்கிரஸ் அதிக சட்டமன்ற உறுப்பினர்களை வைத்துள்ளோம் எனவும் நாங்கள் கூட்டணி சேருமிடம் வெற்றி பெறுகிறது எனவும் தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.