சட்டமன்றத் தேர்தலின்போது சூயஸ் திட்டத்தை தடை செய்வதாக சொன்னவர்கள் இப்போது அந்த திட்டத்தை தடை செய்யவில்லை. துரிதப்படுத்தி இருக்கின்றனர் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன்
குற்றம்சாட்டியுள்ளார்.
கோவையில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கோவை வந்தார். அவர், பந்தய சாலை பகுதியில் உள்ள தாஜ் ஹோட்டலில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘சட்டமன்றத் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. சூயஸ் திட்டத்தை தடை செய்யவில்லை. அதை துரிதப்படுத்தி இருக்கின்றனர் எனவும் தெரிவித்தார்.
வாக்குறுதிகளை கூட்டி தள்ளிவிட்டு தேர்தலில் போட்டியிட்ட அரசியல் கட்சிகள் செயல்படுகின்றன எனவும் குற்றம்சாட்டினார். தற்போது ஊழலுக்கும், ஊழலுக்குள் நடக்கும் போட்டியைதான் ஊடகங்கள் பார்த்து கொண்டு இருக்கின்றன.
ஊடகங்கள் மய்யமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். எங்களை அச்சுறுவதும், விலகி கொள்ள சொல்வதும் பாராட்டு கூட்டங்களாகவே கருதுகின்றோம் என கூறிய அவர், கமல் ஜெயித்தால் மோடி வந்துவிடுவார் என பிரச்சாரம் செய்கின்றனர், மோடி ஜெயித்து கவுன்சிலராக போகின்றாரா என்ன? என கேள்வி எழுப்பினார்.
மோடி ஜெயித்தாலும் தோத்தாலும் அதை பற்றி கவலையில்லை என தெரிவித்த அவர், எங்களை பா.ஜ.கவின் பி டீம் என்று சொல்லி பார்த்தார்கள். இப்போது கமல் வந்தால் மோடி வந்துவிடுவார் என்று சொல்லி பிற கட்சிகள் பிரச்சாரம் செய்கின்றன எனவும் தெரிவித்தார்.
நான் ரொம்ப கெஞ்ச மாட்டேன், நேர்மையாளர்களுக்கு ஊடகங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என தெரிவித்த அவர், நகர்புற உள்ளாட்சித் தேர்தலை நேர்மையாக எதிர்கொள்வேன் எனவும் தெரிவித்தார். கிராம சபை நடத்தப்படுவதை போல ஏரியா சபை, வார்டு கமிட்டி நடப்பதை உறுதிசெய்வேன் என்பது எஙகள் கட்சியினரின் வாக்குறுதி என்றார். தொடர்ந்து பேசிய அவர், நீட்டை ஒழிப்பேன் என்றனர். இப்பொது நீட்டுக்கு டியூசன் என்கின்றனர் எனக்கூறிய அவர்,
எங்கள் கட்சியில் இருந்து வேறு கட்சிக்கு தாவவில்லை. எங்கள் கட்சியினரை கொத்திக்கொண்டு போகின்றனர் எனவும் தெரிவித்தார். ஏன் மேயராக முயற்சிக்கவில்லை என்ற கேள்விக்கு நான் தலைவராகவே இருக்கின்றேன் என பதில் அளித்த அவர், ஹிஜாப் விவகாரம் குறித்த கேள்விக்கு நாமம் போடவும், பட்டை அடிக்க என எல்லாருக்கும் உரிமையுண்டு. நாத்திகத்தையும் கிண்டல் அடிக்கக் கூடாது, ஆத்திகத்தையும் கிண்டல் அடிக்கடி கூடாது எனவும் தெரிவித்த அவர், ஒரே ஒரு அரசியல் கட்சிதான் இதன் பின்னணியில் இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.
கேரள எம்.எல்.ஏவை மணக்கிறார் இந்தியாவின் இளம் வயது மேயர் ஆர்யா!
சட்டமன்ற தேர்தலுக்கு பின்பு கொரோனா காரணமாக மக்களை சந்திக்க இயலவில்லை. ஆனால் கட்சியினர் மக்களைத் தொடர்ந்து சந்தித்து வருகின்றனர் என தெரிவித்த அவர், கோவையில் மக்கள் நீதி மய்யம் வாங்கும் ஓவ்வொரு ஓட்டுக்கும் அடுத்த 5 ஆண்டுகளில் மரம் வழங்கப்படும் எனவும் கமலஹாசன் தெரிவித்தார்.
இதனையடுத்து பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில் கமலஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டார். வேட்பாளர்களை ஆதரித்து வேனில் இருந்தபடி பிரச்சாரம் மேற்கொண்ட கமலஹாசன், ‘இவர்கள் கடமையை செய்ய வந்தவர்கள். அவர்கள் வியாபாரத்திற்கு வந்தவர்கள். இதை புரிந்து கொள்ளாவிட்டால் கோவை விளங்காது என தெரிவித்தார். பணம், பொருள் கொடுத்தால் வாங்கி வைத்துகொள்ளுங்கள் என்று சொல்ல மாட்டேன். அது சுயமரியாதை சம்மந்தப்பட்ட விசயம் என தெரிவித்த அவர், சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் எதுவும் மாறவில்லை எனவும், ஊழல் ஆட்சியில் கொசுக்கள்தான் சந்தோசமாக வாழ்கின்றது. மக்கள் அல்ல எனவும் தெரிவித்தார்.
மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் வரவு செலவு கணக்கை காட்டுவார்கள் என தெரிவித்த அவர், மக்கள் நீதி மய்யத்துக்கு போடும் ஒவ்வொரு ஓட்டுக்கும் மரம் கொடுப்போம், மரம் நடப்படும் எனவும் கமல்ஹாசன் தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.