கோவை மாநகராட்சி மேயர் தேர்தல் இன்று காலை மாமன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.
திமுக கூட்டணி 96 வார்டுகளில் வெற்றி பெற்று பெருபான்மையுடன் இருந்தது. இன்றைய தினம் நடைபெற்ற தேர்தலில்
அதிமுக சார்பில் தேர்வு செய்யப்பட்ட மூன்று வேட்பாளர்களும் தேர்தலைப் புறக்கணித்தனர். இந்நிலையில் திமுக சார்பில் மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கல்பனா போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயராக தேர்வு செய்யப்பட்ட கல்பனாவிற்கு, வெற்றி பெற்றதற்கான சான்றிதழை மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா வழங்கினார். பின்னர், மேயருக்கான உடையான கருப்பு அங்கி அணிந்த படி, மேயர் இருக்கைக்கு வந்த கல்பனாவிற்கு மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா செங்கோல் வழங்கினார். அப்போது தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் இருந்தார். பின்னர் மேயருக்கான உடையுடன் கோவையின் முதல் பெண் மேயர் கல்பனா, மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி காலில் விழுந்து ஆசி வாங்கினார்.
பின்னர் மேயரின் அறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கல்பனா ஆவணங்களில் கையெழுத்திட்டு பொறுப்பேற்றார். பின்னர் பீளமேடு பயனீர் மில் பகுதியில் உள்ளமாநகராட்சி பள்ளிகளில கழிப்பிடம் கட்டுவதற்காக உத்திரவில் கையெழுத்திட்டார். அதன், பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மேயராக என்னை தேர்வு செய்த முதல்வருக்கும், இந்த அரிய வாய்ப்பை வழங்கிய உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் நன்றி என தெரிவித்தார். பொதுமக்களை நேரடியாக சந்தித்து கோரிக்கைகளை கேட்பேன் எனவும், பொதுமக்கள் எப்பொழுதும் என்னை சந்திக்கலாம் எனவும் தெரிவித்த அவர், மக்களோடு மக்களாக இருந்து பணியாற்றுவேன் எனவும் தெரிவித்தார்.
Must Read : விசிகவுக்கு ஒதுக்கப்பட்ட நகராட்சிகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றி - சாலைமறியல்... போலீஸ் குவிப்பு
அடிமட்ட உறுப்பினரான என்னை உயர்ந்த பதவியில் உட்கார வைத்து அழகுபார்த்த முதல்வரின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருப்பேன் என தெரிவித்த அவர், கோவை மாநகராட்சியில் 100 வார்டுகளில் தடையின்றி குடிநீர் கிடைக்கவும், தெருவிளக்கு சாலை வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பள்ளிகளை மேம்படுத்துதல், அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்துதல் போன்ற பணிகளில் கவனம் செலுத்துவேன் எனவும் கோவையின் முதல் பெண் மேயராக தேர்வான கல்பனா தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.