என்னது கடத்தல் மண் எடுத்து தருவீங்களா...? மணல் சப்ளையர்ஸ் பேனரால் பரபரப்பு
கோவையில் வட்டார மொழியில் "கடத்தல் மணல்" எடுத்துத்தரப்படும் என்று வைக்கப்பட்டு இருந்த விளம்பர பலகை சமூக வலைதளங்களில் பேசுபொருள் ஆனதை தொடர்ந்து அவற்றை அகற்றுமாறு மணல் சப்ளையர்களுக்கு காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு பேச்சு வழக்கு இருந்து வருகின்றது. அந்த வகையில் கோவை வட்டார பகுதிகளில் பழைய கட்டிடங்களை இடித்து எடுக்கப்பட்ட மண்ணை "கடத்தல் மண்" என்று அழைப்பது வழக்கம். வீடுகளின் முன்பு குழிகளை நிரப்பவும், சாலைகளை சமன் செய்யவும் , பாழடைந்த கிணறுகளை நிரப்பவும் இந்த கட்டிடம் இடித்த கழிவுமண்ணை பயன்படுத்துவது வழக்கம்.
கோவை இடையர்பாளையம் பகுதியில் உள்ள வாசு மணல் சப்ளையர்ஸ் என்ற நிறுவனம் தனது பிளக்ஸ் போர்டில் "கடத்தல் மண்" எடுத்து தரப்படும் என தெரிவித்து இருந்தது. அனுமதி இன்றி எடுக்கப்படும் மண்ணிற்கும் "கடத்தல் மண்" என்ற அர்த்தம் இருக்கும் நிலையில் சமூக வலைதளங்களில் வாசு மணல் சப்ளையர்ஸ் நிறுவனத்தின் பிளக்ஸ் போர்டு வைரலானது.
மேலும் படிக்க: மெடிக்கலில் போதை மாத்திரைகள் சப்ளை.. சென்னையில் சிக்கிய கும்பல் - போலீஸார் தீவிர விசாரணை
கோவையில் பட்டவர்த்தனமாக "கடத்தல் மண்" எடுத்து கொடுக்கப்படும் என தெரிவித்து இருக்கின்றனரே? என்ற விமர்சனங்களும் சமூக வலைதளங்களில் வைரலானது. இது காவல் துறையினர் கவனத்திற்கு சென்ற நிலையில் துடியலூர் போலீசார் இடையர்பாளையம் பகுதியில் உள்ள மணல் சப்ளையர்களை "கடத்தல் மண்" என்ற வட்டார மொழியில் குறிப்பிடப்பட்டுள்ள வாசகத்தை நீக்குமாறு அறிவுறுத்தினர்.
ஒரு வட்டார மொழி இன்னொரு பகுதியில் வேறு மாதிரியான உணர்வுகளை கொடுப்பதால் அனைவருக்கும் புரியும் வகையில் பிளக்ஸ் பேனரில் குறிப்பிடும்படி மணல் சப்ளையர் நிறுவனங்களை நடத்தி வருபவர்களுக்கு அறிவுறித்தனர்.
இதையும் படிங்க: கணினிப் பிரிவு மாணவர்களுக்கு கட்டண விலக்கு, சிறார் பருவ இதழ்... பள்ளிக் கல்வித்துறையின் முக்கிய அறிவிப்புகள்
சமூக வலைதளங்களில் வைரலான வாசு மணல் சப்ளையர்ஸ் மட்டுமின்றி கோவை பகுதியில் உள்ள அனைத்து மணல் சப்ளையர்களும் இந்த "கடத்தல் மண்" என்ற வார்த்தையை நீக்குமாறு காவல் துறையினர் அறிவுறுத்திய நிலையில் , "கடத்தல் மண்" என்ற வட்டார மொழியினை நீக்கி விட்டு கட்டிடம் இடித்த மண் எடுத்து தரப்படும் என பிளக்ஸ் பேனரில் திருத்தம் செய்து வருகின்றனர். ஒரு சில மணல் சப்ளையர்கள் "கடத்தல் மண்" என்ற வாசகத்தையே மறைத்தும் வருகின்றனர்.
*
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.