தங்கச்சி பாப்பாவிற்கு பட்டு பாவாடை வாங்க சேமித்த பணம் - முதல்வர் நிவாரணநிதிக்கு அனுப்பிய சிறுமி!

பிரணவிகா

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரொனா தொற்றை தடுக்க அரசு மேற்கொள்ளும் பணிகளுக்காக பொதுமக்கள்  நிவாரண உதவி வழங்கிட வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்து இருந்தார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
கோவையில் தங்கச்சி பாப்பாவுக்கு பட்டுப்பாவாடை வாங்குவதற்காக உண்டியலில் சேர்த்து வைத்திருந்த  1516 ரூபாய் பணத்தை, முதல்வர் நிவாரணநிதிக்கு 2 ம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுமி அனுப்பினார்.

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரொனா தொற்றை தடுக்க அரசு மேற்கொள்ளும் பணிகளுக்காக பொதுமக்கள்  நிவாரண உதவி வழங்கிட வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்து இருந்தார். அதை ஏற்று பல்வேறு தரப்புகளில் இருந்து முதல்வர் நிவாரண நிதிக்கு  பணம் அனுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் கோவை காந்தி மாநகர் பகுதியை சேர்ந்த மின்வாரிய ஊழியர் பழனிச்சாமி என்பவரின்  7 வயது மகள்  முதல்வரின் வேண்டுகோளை தொலைக்காட்சியில் பார்த்துள்ளார்.
இதனையடுத்து தான் தன்னுடைய 5 மாத தங்கையின் முதல் பிறந்த நாளுக்கு பட்டுபாவடை வாங்க சேர்த்து வைத்த உண்டியல் முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கலாம் என தந்தையிடம் தெரிவித்துள்ளார்.

தந்தை பழனிச்சாமியும் சிறுமியின் எண்ணத்திற்கு ஒப்புதல் அழைத்துவிடவே,  உண்டியலை கையில் தூக்கியபடி ஆர்.எஸ்.புரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு வந்தார். வங்கியில்  கொரொனா நோயாளிகளுக்காக, முதல்வரின் நிவாரண நிதிக்கு பணம் செலுத்த வந்திருப்பதை தெரிவித்து விட்டு, பணம்  செலுத்தும் செலானை வாங்கிக்கொண்டு, உண்டியலை வங்கியிலேயே வைத்து உடைத்து எண்ணியுள்ளார்.

அதில் தங்கச்சி  பாப்பாவுக்கு பட்டுபுடவை வாங்க சேர்த்து வைத்திருந்த 1516 ரூபாய் பணம் சில்லறைகளாகவும், நோட்டுகளாகவும் இருந்தது. அவற்றை அப்படியே முதல்வரின் நிவாரணநிதிக்கு அனுப்பி வைத்தார் தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் பிரணவிகா.

இது குறித்து பேசிய சிறுமி பிரணவிகாவின் தந்தை பழனிச்சாமி, ஏற்கனவே கடந்த முறை முதல் அலை பரவிய போது முதல்வரின் நிவாரண நிதிக்கு 500 ரூபாய் அனுப்பி வைத்ததாகவும், அதற்கு முதல்வரின் அலுவலகத்தில் இருந்து சான்றிதழ் அனுப்பியிருந்ததை தனது மகளிடம் காட்டி இருந்ததாகவும் , அதை அப்போது ஆர்வமாக அவர் கேட்டுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.

Also read... மாட்டுசாண தெரப்பி உடல் நலத்திற்கு கேடு தான் விளைவிக்கும் - மருத்துவர்கள் விளக்கம்!

இந்நிலையில் தற்போது முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்பு தொலைக்காட்சிகளில் வந்தவுடன், ஏற்கனவே தமிழக அரசுக்கு நிவாரண நிதி  அனுப்பி இருந்ததை சரியாக நியாபகம் வைத்து,  இந்த முறையும் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ உண்டியலில் சேர்த்து வைத்த பணத்தை அனுப்பலாம் என தெரிவித்தாகவும் கூறினார்.

தங்கையின் முதல் பிறந்தநாள் வரும் போது, இருவருக்கும் பட்டுப்பாவாடை வாங்க வேண்டும் என்பதற்காக உண்டியலில் சேர்த்த பணம் அது என தெரிவித்த பழனிச்சாமி,  நெருக்கடியான சூழலில் அரசுக்கு உதவுவது நமது கடமை என தெரிவித்த அவர், இதை பிரணவிகா இயல்பாக கேட்டதால் மறுப்பேதும் சொல்லாமல் அவள் எண்ணத்தை நிறைவேற்றி இருப்பதாகவும் மின்வாரிய ஊழியர் பழனிச்சாமி தெரிவித்தார்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: