கோவை திமுக நிர்வாகி மீது அவதூறு பரப்புவதாக தொடரப்பட்ட வழக்கில் முதல்வர் பழனிசாமிக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை திமுக நிர்வாகியான சூலூர் ஏ. ராஜேந்திரன் கடந்த ஆண்டு மார்ச் 19ஆம் தேதி சென்னையிலிருந்து கோவைக்கு ரயிலில் சென்றுள்ளார். அவருக்கு நீரழிவு பிரச்சினை இருப்பதால் மேல்படுக்கையிலிருந்து கீழே இறங்கும்போது, நிலை தடுமாறி கீழ் படுக்கையில் இருந்த பெண் மீது விழுந்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக ரயில்வே நிர்வாகம் மற்றும் காவல்துறையில் அந்த பெண் வாய்மொழி புகார் அளித்த நிலையில், தனது செயல்பாடு உள்நோக்குடன் நடந்தது இல்லை என்றும். நீரழிவு பிரச்சினை இருப்பதால் அவசரமாக இறங்கியதாகவும் சூலூர் ராஜேந்திரன் அந்த பெண்ணிடம் விளக்கம் அளித்துள்ளார். இதன்பின்னர் தன் புகாரில் நடவடிக்கை எடுக்க வேண்டாமென பெண் தெரிவித்துள்ளார். ஆனால் 15 நாட்களுக்கு பிறகு சூலூர் ராஜேந்திரன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
ரயில் பயணத்தின் பொழுது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரங்களில் தன்னைப்பற்றி அவதூறாக பேசுவதாக முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோருக்கு எதிராக சூலூர் ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
சம்பந்தப்பட்ட பெண் அளித்த புகாரில் பதிவான வழக்கை உயர் நீதிமன்றம் ரத்து செய்துவிட்ட நிலையில், அவதூறாக சட்டமன்ற தேர்தல் பிரச்சார கூட்டங்களில் பேசுவதற்கு தடை விதிக்க வேண்டுமெனவும், இழப்பீடாக ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்திருந்தார்.
முதல்வர் பழனிசாமிக்கு எதிராக தொடர்ந்த வழக்கு மட்டும் நீதிபதி வி.பார்த்திபன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ராஜேந்திரன் வழக்கு குறித்து முதல்வர் பழனிசாமிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஜூன் 10ஆம் தேதி ஒத்திவைத்துள்ளார்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.