Home /News /tamil-nadu /

கோவை- பாலக்காடு ரயில் பயணத்தால் யானைகள் உயிரிழப்பு - வழித்தடத்தை மாற்ற வன ஆர்வலர்கள் கோரிக்கை

கோவை- பாலக்காடு ரயில் பயணத்தால் யானைகள் உயிரிழப்பு - வழித்தடத்தை மாற்ற வன ஆர்வலர்கள் கோரிக்கை

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

கோவை - பாலக்காடு இடையே ரயில்பாதையில் யானைகள் அடிபட்டு உயிரிழப்பதை தவிர்க்க கோவையில் இருந்து பொள்ளாச்சி வழியாக ரயில்களை மாற்று பாதையில் இயக்க வேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

கோவையில் இருந்து பாலக்காடு செல்லும் ரயில் பாதையானது மதுக்கரை, எட்டிமடை வனப்பகுதிகளின் வழியாக செல்கின்றது. வனப்பகுதிகளின் வழியாக செல்லும் ரயில்களில் மோதி யானைகள் உயிரிழப்பது தொடர்ந்து வருகின்றது. கடந்த 19 ஆண்டுகளில் 29 யானைகள் ரயில்கள் மோதி உயிரிழந்துள்ளன. கடந்த நவம்பர் மாதம் ரயில் மோதி 3 யானைகள் உயிரிழந்த நிலையில், காட்டு யானைகள் மீது ரயில் மோதி ஏற்படும் உயிரிழப்பை தடுக்க ரயில்வே நிர்வாகமும், வனத்துறையும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் கோவை - பாலக்காடு இடையே ரயில் பாதையில் யானைகள் அடிபட்டு இறப்பதை தவிர்க்க, ரயில்களை பொள்ளாச்சி வழியாக மாற்றுப்பாதையில் இயக்க வேண்டும் என வன ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கோவை - பாலக்காடு இடையே ரயில்களை இயக்க வேக கட்டுப்பாடு இருக்கும் நிலையில் ( பகலில் 65 கி்மீ வேகம், இரவில் 45 கிமீ வேகம்)கோவையில் இருந்து பொள்ளாச்சி வழியாக பாலக்காட்டிற்கு ரயில்களை இயக்கும் போது முழுவேகத்தில் ரயில்களை இயக்க முடியும் எனவும் வன ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

கோவை பாலக்காடு இடையேயான 54 கி.மீ பயண தூரம் , பொள்ளாச்சி வழியாக செல்லும் போது 98 கிலோ மீட்டராக அதிகரித்தாதாலும், கூடுதலாக  25 நிமிடம் மட்டுமே பயண நேரம் அதிகமாக இருக்கும் எனவும் அதே வேளையில் இந்த மாற்றுபாதை  மக்களுக்கும், யானைகளும் பாதுகாப்பானது எனவும் வன ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பான பரிந்துரைகளை தெற்கு ரயில்வேவிற்கு  அனுப்பியுள்ளதாக வன ஆர்வலர் மோகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தெரிவித்த கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், ‘தமிழகத்தில் அதிகப்படியான யானைகள் மரணம் கோவை - பாலக்காடு மார்கத்தில் உள்ள ரயில் பாதையில் நடைபெற்று உள்ளது. வன உயிரின  ஆர்வலர்கள் கோவை - பாலக்காடு வழித்தடத்தில் அதிவேக ரயில்களை பொள்ளாச்சி மார்க்கமாக மாற்றுபாதையில் இயக்க வைத்துள்ள ஆலோசனையை தென்னக ரயில்வே நிர்வாகம் பரிசீலிக்க வேண்டும் என தெரிவித்தார். கோவை பொள்ளாச்சி ரயில் பாதை ஏற்கனவே பல நூறு கோடி செலவில் அகலப்பாதையாக மாற்றி, மின்மயப்படுத்தி இருப்பதையும் கவனத்தில் எடுத்துக்கொண்டு வன ஆர்வலர்கள் முன்வைக்கும் மாற்று பாதை திட்டத்தை பரிசீலிக்க வேண்டும் எனவும்  25 நிமிடம் மட்டுமே அதிக பயண நேரம் என்பது  ஒரு சிறந்த மாற்று ஆலோசனை’ என்றும் தெரிவித்தார்.

காட்டு யானைகளின்  உயிரைப் பாதுகாக்கும்  நடவடிக்கையாக இதை பரிசிலிக்க வேண்டும் எனவும், இந்த கோரிக்கையை பொள்ளாச்சி, நீலகிரி, ஈரோடு, பாலக்காடு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்து பெற்று ரயில்வே உயர் அதிகாரிகளுக்கும், ரயில்வே அமைச்சருக்கும் வழங்க இருப்பதாகவும் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தெரிவித்தார்.

''பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநர் ரவியை நீக்க வேண்டும்'' : வைகோ வலியுறுத்தல்

தற்போது கோவை -  பாலக்காடு இடையே தினந்தோறும் 70 க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படும் நிலையில், இந்த எண்ணிக்கை  வருங்காலங்களில் 100 க்கும் அதிகமான ரயில்களாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. வர்த்தக ரீதியாக வளர்ந்து வரும் பொள்ளாச்சி  நகரத்தையும் இணைத்து வருங்காலத்தில் தேவைக்கு ஏற்ப கூடுதல் ரயில்களையும், ரயில் பாதைகளையும் இந்த தடத்தில் ஏற்படுத்த முடியும் என்பதால் இந்த பரிந்துரை வருங்காலத்தில் ஏற்படுத்தப்பட இருக்கும் வளர்ச்சிகளுக்கும் தடை இல்லாமல் அமையும்.

எனவே  தென்னக ரயில்வே நிர்வாகம்  இந்த  மாற்றுபாதை திட்டத்தை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது வன ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. மேலும் இரவு நேரத்தில் வனப்பகுதியில் ரயில் பாதைகளில் வன ஊழியர்கள் யானைகளின் பாதுகாப்பிற்காக ரோந்து செல்லும் தேவையும் இருக்காது என்பதும் வன ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
Published by:Karthick S
First published:

Tags: Coimbatore, Elephant

அடுத்த செய்தி