கோவையில் விவசாயியை கிராம உதவியாளர் தாக்கிய விவகாரம்: விஏஓ, உதவியாளர் பணியிடை நீக்கம்!

கோவையில் விவசாயியை கிராம உதவியாளர் தாக்கிய விவகாரம்: விஏஓ, உதவியாளர் பணியிடை நீக்கம்!

கோவையில் விவசாயியை தாக்கிய விவகாரத்தில் கிராம நிர்வாக அலுவலர் கலைசெல்வி, கிராம உதவியாளர் முத்துச்சாமி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  

  • Share this:
கோவை அன்னூர் ஒட்டர்பாளையம் வி.ஏ.ஒ அலுவலகத்தில் கிராம உதவியாளர் விவசாயியை தாக்கியது, பின்னர் விவசாயி காலில் விழுந்து மன்னிப்பு கேட்டது தொடர்பான வீடியோ வெளியான விவகாரத்தில் கிராம நிர்வாக அலுவலர் கலைசெல்வி, கிராம உதவியாளர் முத்துச்சாமி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

கோவை மாவட்டம் அன்னூர் ஒட்டர்பாளையத்தில் விவசாயி கோபால்சாமி என்பவரின் காலி்ல் கிராம உதவியாளர் முத்துச்சாமி விழுந்த வீடியோ காட்சிகள் முதலில் வெளியானது. தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் கிராம உதவியாளரை காலில் விழ வைத்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவிய நிலையில்,  இதுகுறித்து விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்திரவிட்டார்.

மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. இதனிடையே தன்னை கிராம நிர்வாக அலுவலர் தாக்கியதாக அன்னூர் காவல் நிலையத்தில் விவசாயி கோபால்சாமி புகார் அளித்து இருந்தார்.

Also read: செருப்பு தைக்கும் குடும்பத்தில் இருந்து வந்தவன் நான், என்னை மத்திய அமைச்சராக்கியது பாஜக: எல்.முருகன் உருக்கம்

இந்நிலையில் விவசாயி கோபால்சாமி, கிராம நிர்வாக அலுவலர் கலைசெல்வி, கிராம உதவியாளர் முத்துச்சாமி ஆகியோரிடம் மாவட்ட வருவாய் அலுவலர் விசாரணை  நடத்தினார்.

விசாரணைக்கு பின்னர் கிராம உதவியாளர் முத்துசாமி, விவசாயி கோபால்சாமியை தாக்கியத்தற்கான எந்த ஆதாரமும் இல்லை எனவும், அதே வேளையில் விவசாயி கோபால்சாமி காலில் , கிராம உதவியாளர் முத்துச்சாமி விழுந்தற்கான ஆதாரம் இருப்பதாக அறிக்கை மாவட்ட ஆட்சியருக்கு அளிக்கப்பட்டது.

இந்த அறிக்கையின் அடிப்படையில் விவசாயி கோபால்சாமி மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். விவசாயி கோபால்சாமி மீது அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக வி.ஏ.ஓ கலைச்செல்வி புகாரில் ஒரு வழக்கும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கிராம உதவியாளர் முத்துச்சாமி கொடுத்த புகாரின் கீழ் ஒரு வழக்கும் என இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் வி.ஏ.ஓ அலுவலகத்தில் கிராம உதவியாளர் முத்துச்சாமி, விவசாயி கோபால்சாமி அடித்து கீழே தள்ளும் வீடியோ காட்சிகள் வெளியானது. இதனையடுத்து விவசாயிகள் சங்கத்தினர் முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் எனவும் வன்கொடுமை சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

இந்நிலையில்  மாவட்ட வருவாய் அலுவலர் விசாரணையின்போது உண்மைக்கு மாறான தகவல்களை தெரிவித்த ஒட்டர்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி, கிராம உதவியளர் முத்துசாமி ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்திரவிட்டார்.

இதனையடுத்து கோவை வடக்கு கோட்டாட்சியர் ரவிசந்திரன் கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வியை பணியிடை நீக்கம் செய்தார். இதே போல் அன்னூர் வட்டாச்சியர் ரத்தினம், ஒட்டர்பாளையம் கிராம உதவியாளர் முத்துச்சாமியை பணியிடை நீக்கம் செய்தார்.

இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க அன்னூர் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒட்டர்பாளையம் கிராம நிர்வாக அலுவலகத்தில் நடந்த சம்பவத்தை செல்போனில் பதிவு செய்து, தவறான நோக்கத்துடன் சமூக வலைதளங்களில் பதிவிட்ட நபர் குறித்தும் அன்னூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அன்னூர் பகுதியைச் சேர்ந்த சிறு இதழ் நிருபர் இந்த செயலில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்துள்ள நிலையில், போலீசார் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Published by:Esakki Raja
First published: