• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • உயர் நீதிமன்ற உத்தரவை மீறி பட்டாசு வெடித்து யானைகள் விரட்டல் - மாற்றுவழிகளை கண்டறிய வன உயிரின ஆர்வலர்கள் கோரிக்கை

உயர் நீதிமன்ற உத்தரவை மீறி பட்டாசு வெடித்து யானைகள் விரட்டல் - மாற்றுவழிகளை கண்டறிய வன உயிரின ஆர்வலர்கள் கோரிக்கை

யானைகள்

யானைகள்

யானைகளை காட்டுக்குள் விரட்ட புதிய வழிமுறைகளைக் கண்டறிய வேண்டும் என்று வன உயிரின ஆர்வலர்கள் கோரிக்கைவைக்கின்றனர்.

  • Share this:
காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும்போது பட்டாசு வெடிக்கக் கூடாது என உயர்  நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தாலும், தற்போது வரை பட்டாசு வெடித்து விரட்டும் நடைமுறையே இருந்து வருகிறது. பட்டாசுக்கு மாற்றாக யானைகளை விரட்ட புதிய முறையை வன உயிரின ஆய்வாளர்கள் மூலம் கண்டறிய வேண்டும் என வன ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழகத்தில் யானை மனித மோதல் நிகழும் இடங்களில் முக்கியமான பகுதியாக இருப்பது கோவை மாவட்டம். ஆண்டு தோறும் யானை மனித மோதலில் 10 முதல் 12 பேர் வரை சராசரியாக உயிரிழக்கின்றனர். இந்நிலையில் யானைகள வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சம்பவங்கள் அதிகமாக இருப்பதும் கோவை மாவட்ட வனப்பகுதியில்தான். வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகளை மீண்டும் வனப்பகுதிக்கு விரட்ட பட்டாசு வெடிக்கும் பழக்கம் தற்போது வரை நடைமுறையில் இருந்து வருகின்றது.

கடந்த ஜனவரி மாதம் சென்னை உயர் நீதிமன்றம் காட்டு யானைகளை பட்டாசு வெடித்து விரட்ட கூடாது என உத்திரவிட்டுள்ளது. எனினும் காட்டு யானைகளை விரட்டுவதற்கு வேறு வழி தமிழக வனத்துறையிடம் இல்லாததால் தற்போது வரை பட்டாசு வெடித்து யானையை விரட்டி வருகின்றனர்.

இந்நிலையில் பட்டாசு வெடிப்பதால் யானைகள் அச்சம் அடைந்து ஊருக்குள் புகுந்து விடும் சம்பவங்கள் இருக்கும் நிலையில், யானைகளுக்கு காயம் ஏற்படும் சம்பவங்களும் நடைபெறுகின்றது. எனவே பட்டாசு வெடிப்பதற்கு மாற்றாக ஒரு புதிய வழிமுறையை கண்டறிய வேண்டுமென்பது வன உயிரின ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது.

இதுகுறித்து பேசிய இயற்கைப் பாதுகாப்பு சங்கத் தலைவர் ஜலாலுதீன்,’நீதிமன்றம் பட்டாசு வெடிக்க கூடாது என அறிவுறுத்தி இருக்கும் நிலையில், பட்டாசுகளை வெடிப்பதை தவிர வனத்துறைக்கு வேறு வழியில்லை எனவும், யானை வனத்தில் இருந்து வெளியே வருவதை வனத்துறை பல்வேறு முயற்சி எடுத்தாலும் யானைகள் வனத்தை விட்டு வெளியேறுவதை தடுக்க முடியவில்லை என்பதுதான் உண்மை என தெரிவித்தார்.

யானைகளுக்கு பாதிப்பு இல்லாமல் குறைந்த அளவு ஒலியுடன் வெடிக்கும் வகையிலான பட்டாசுகள் வெடிக்க நீதிமன்றம் மூலம் தமிழக வனத்துறை அனுமதி பெற முயற்சிக்க வேண்டும் எனவும், அதிக ஒளி கொடுக்கும் டார்ச்களை பயன்படுத்தி யானைகளை விரட்டவும் முயற்சிக்கலாம் எனவும் தெரிவிக்கும் வன ஆர்வலர்கள், உயிரியல் ஆராய்ச்சியாளர்கள் மூலம் பட்டாசுக்கு மாற்று வழியை கண்டறிய வேண்டியதும் அவசியம் எனவும் ஜலாலூதீன் தெரிவித்தார்.

பட்டாசு வெடிக்க கூடாது என்ற உத்தரவு வரவேற்கதக்கது எனவும், பட்டாசுக்கு மாற்றாக ஆம்புலன்ஸ் போன்ற சத்தம் எழுப்பும் முறைகளையும் அதிக ஒளி காட்டி யானைகளை வனத்திற்குள் விரட்ட முயற்சிக்கலாம் எனவும், இது தவிர வேறு வழி முறைகள் இல்லாததால் வன உயிரின ஆய்வாளர்களை கொண்டு இதுகுறித்து விரிவான ஆய்வு நடத்த வேண்டும் என வன ஆர்வலர் சசிக்குமார் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மாற்று வழி கண்டறியப்படும் வரை வெடி மட்டுமே சாத்தியப்படும் என தெரிவிக்கும் அவர் பொதுமக்கள் யானைகளை விரட்ட கூடாது, வனத்துறையினர் மட்டுமே யானைகளை விரட்டும் முறையினை கையாள வேண்டும் எனவும் தெரிவித்தார். காட்டு யானைகளை  விரட்டுவதற்காக போடப்படும் பட்டாசுகள் பல நேரங்களில் யானைகளுக்கு உடலில் காயத்தை ஏற்படுத்தி விடுகின்றன. மேலும் பட்டாசு வெடிப்பதால் மனப்பதட்டம் அடையும் யானைகள் வழிமாறி ஊருக்குள் செல்லும் போது அசம்பாவிதங்களும் ஏற்படுகின்றன.  இந்நிலையில் பட்டாசுக்கு மாற்றாக புதிய வழிமுறையை கண்டறிவதற்கான ஆய்வு பணிகளை தமிழக வனத்துறை துவங்க வேண்டும் என்பதே வன ஆர்வலர்களின் கருத்தாக  இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Karthick S
First published: