எஸ்.பி.வேலுமணி ஆதரவாளர்கள் கொலை மிரட்டல் விடுக்கிறார்கள் - தி.மு.க நிர்வாகி புகார்

எஸ்.பி.வேலுமணி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆதரவாளர்கள் கொலை மிரட்டல்விடுக்கிறார்கள் என்று தி.மு.க நிர்வாகி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

 • Share this:
  கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் ஆதரவாளர்கள் தனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும், தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என தி.மு.கவைச் சேர்ந்த விஷ்ணுபிரபு என்பவர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

  அ.தி.மு.க இளம்பெண், இளைஞர் பாசறை மாநில துணை தலைவராக இருந்த விஷ்ணுபிரபு. இவர் அன்மையில் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்பான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடந்த பொழுது, ஆனைக்கட்டி பகுதியில் உள்ள சொகுசு பங்களா குறித்து சில தகவல்களை வெளியிட்டு இருந்தார். அந்த சொகுசு பங்களாவில் இருந்து பணம் பல்வேறு இடங்களுக்கு அனுப்பப்படுவதாகவும் பணம் பதுக்கி வைக்கும் மையமாகவும் அந்த இடம் செயல்படுவதாகவும் வாரபத்திரிகைகளுக்கு விஷ்ணு பிரபு பேட்டியளித்திருந்தார்.

  இந்நிலையில் எஸ்.பி.வேலுமணியின் நெருங்கிய ஆதரவாளரான ஷர்மிளா பிரியா என்பவர் கேரளா மாநிலம் சோலையூர் காவல்நிலையத்தில் தன் மீது பொய்யான புகார் அளித்துள்ளதாகவும், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் தன்னை பல்வேறு விதங்களில் அழைத்து கொலை மிரட்டல் விடுவதாகவும் கூறி விஷ்ணுபிரபு இன்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்.பி செல்வநாகரத்தினத்திடம் புகார் அளித்தார். தனது உயிருக்கும், தனது குடும்பத்தினர் உயிருக்கும் பாதுகாப்பு அளிக்கும்படி அவர் புகார் மனுவில் வலியுறுத்தி உள்ளார்.

  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஷ்ணு பிரபு, ‘கேரள மாநிலத்தில் சொகுசு பங்களாவின் உரிமையாளரான ஷர்மிளா பிரியா காவல்நிலையத்தில் புகார் அளித்து இருப்பதாகவும், சர்மிளா பிரியா யார் என்பது குறித்து விசாரணை நடத்தினால் பல்வேறு உண்மைகள் தெரிய வரும் எனவும் தெரிவித்தார். மேலும் முன்னாள் அமைச்சர் வேலுமணியின் டெண்டர் மோசடி குறித்து பல்வேறு ஆவணங்கள் தன்னிடம் இருப்பதாகவும் தேவைப்படும் பொழுது அந்த ஆவணங்கள் வெளியிடப்படும் எனவும் விஷ்ணு பிரபு தெரிவித்தார்.

  இதுதொடர்பான ஆவணங்கள் தனது பத்துக்கும் மேற்பட்ட நண்பர்களிடம் பகிர்ந்து வைத்துள்ளதாகவும் தேவைப்படும் பொழுது அந்த டெண்டர் ஆவணங்கள் காவல் துறையிடமோ அல்லது ஊடகங்கள் முன்னிலையிலோ வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  கேரள மாநிலத்தில் உள்ள சொகுசு பங்களா முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமானது என தெரிவித்திருந்த நிலையில், தற்போது சர்மிளா பிரியா புகார் அளித்து இருப்பதாகவும் அவர் யார் என்பது குறித்து விசாரிக்க வேண்டும் எனவும் விஷ்ணுபிரபு தெரிவித்தார்.
  Published by:Karthick S
  First published: