திமுக-வுக்கு ஓட்டு கேட்டு சிக்கலில் சிக்கிய வெளிநாட்டு தொழிலதிபர்
திமுக-வுக்கு ஓட்டு கேட்டு சிக்கலில் சிக்கிய வெளிநாட்டு தொழிலதிபர்
ரூமேனியா தொழிலதிபர்
TN Local Body Election 2022: திமுகவிற்கு ஆதரவாக வெளிநாட்டு சேர்ந்த தொழில்முனைவோர் பிரச்சாரம் மேற்கொண்டதும் அவருக்கு இமிகிரேசன் துறை நோட்டீஸ் வழங்கி இருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் திமுகவிற்கு ஆதரவாக ருமேனியா நாட்டை சேர்தவர் வாக்கு சேகரித்த விவகாரத்தில், நேரில் ஆஜராகி விளக்கமளிக்க அவருக்கு சென்னை சாஸ்திரி பவனில் உள்ள குடியேற்றத் துறை (Immigration) நோட்டீஸ் வழங்கியுள்ளது.
கோவை மாநகராட்சியில் வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிடும் தி.மு.க வேட்பாளர்களுக்கு ஆதரவாக நிகோட்டா ஸ்டெஃபன் மெரிஸ் என்ற ரூமானியா நாட்டை சேர்ந்தவர் சிங்காநல்லூர் பகுதியில் பொது மக்களிடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொழில் நிமித்தமாக ரூமானியா நாட்டில் இருந்து கோவை வந்துள்ள ஸ்டெஃபன், தோளில் தி.மு.க துண்டு அணிந்தபடி, கையில் உதயசூரியன் சின்னத்துடன் சாலையில் நடந்து சென்றும், இரண்டு சக்கர வாகனம் மற்றும் பேருந்துகளில் பயணித்தும் , தனியார் நிறுவனங்களில் ஊழியர்களிடமும் துண்டு பிரசுரங்கள் கொடுத்து திமுகவுக்கு ஆதரவு திரட்டினார்.
இது அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தனது நண்பரின் மூலம் தமிழ்நாடு அரசு பெண்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை பற்றி அறிந்து உற்சாகம் அடைந்து அவர் பரப்புரையில் ஈடுபட்டதாக நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு கொடுத்த பேட்டியில் தெரிவித்து இருந்தார். இத்திட்டத்தினால் ஏழை மக்கள் மிகவும் பயனடைவார்கள், அவர்களது பணம் மிச்சமாகும் என்பதால் திமுகவிற்கு ஆதரவாக துண்டு பிரச்சுரங்களை வழங்கி ஆதரவு திரட்டியதாவும் அவர் தெரிவித்து இருந்தார்.
பிஸினஸ் விசாவில் தமிழகம் வந்துள்ளவர்கள் கடை பிடிக்க வேண்டிய விதிமுறைகளை மீறி வெளிநாட்டவர் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது விசா விதிமுறைகளுக்கு எதிரானது என்பதால், சென்னை சாஸ்திரி பவன் வளாகத்தில் உள்ள மத்திய இமிகிரேசன் துறை ரூமானியா நாட்டை சேர்ந்த நிகோட்டா ஸ்டெஃபன் மெரிஸ்க்கு நோட்டீஸ் வழங்கியது. அசல் ஆவணங்களுடன் இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறும், விளக்கம் ஏற்புடையதாக இல்லையெனில் 1946 வெளிநாட்டவர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அந்த நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுகவிற்கு ஆதரவாக வெளிநாட்டைச் சேர்ந்த தொழில்முனைவோர் பிரச்சாரம் மேற்கொண்டதும் அவருக்கு இமிகிரேசன் துறை நோட்டீஸ் வழங்கி இருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published by:Ramprasath H
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.