கோவை மாநகராட்சி உணவு பாதுகாப்பு அதிகாரி எனக்கூறி கடைகளில் வசூல் செய்து வந்த மாநகராட்சி தற்காலிக குப்பை வண்டி ஓட்டுனர் சிவகுமார் என்பவரை சிங்காநல்லூர் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை சிங்காநல்லூர் பகுதியில் மாநகராட்சி உணவு பாதுகாப்பு துறை அதிகாரி என கூறி சிவக்குமார் என்பவர் அபராதம் விதித்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த வணிகர் சங்கத்தினர் இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட பொழுது, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் யாரும் அபராதம் விதிக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து கோவை மாநகராட்சி உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சோமகுமார் இதுகுறித்து சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த நபர் உணவு பாதுகாப்பு அதிகாரி எனக்கூறி ஈஸ்வரி டிபார்ட்மென்ட் , ஜி.வி.ரெசிடென்சி உட்பட பல்வேறு பகுதியில் உள்ள கடைகளில் பாலிதீன் பை வைத்திருப்பதாக கூறி அபராதம் விதித்து வருவது தெரிய வந்த நிலையில் அந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர்.
Also Read: தாயின் காதலனால் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. போக்சோ சட்டத்தில் இருவர் கைது
அப்போது அவர் நீலிகோணம்பாளையம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பதும், மத்திய மண்டலம் அலுவலகத்தில் தற்காலிக குப்பை வண்டி ஓட்டுனராக பணிபுரிந்தவர் என்பதும் சமீபகாலமாக வேலைக்கு செல்லாமல் இருந்த அவர், போலியாக ரசீது புத்தகம் அடித்து, கோவை மாநகராட்சி உணவு பாதுகாப்பு அதிகாரி எனக்கூறி கடைகளுக்கு அபராதம் விதித்து வசூல் செய்து வந்திருப்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சிவக்குமாரை கைது செய்த போலீசார் பொது ஊழியராக நடித்தல், ஏமாற்றுதல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.