ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த பெண் ஒருவருக்கு கோயம்புத்துரைச் சேர்ந்த இளைஞருடன் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது.
கோவை நரசிம்மநாயக்கன் பாளையம் பகுதியில் வசித்து வருபவர்கள் சுப்பிரமணியம் - தர்ம லட்சுமி தம்பதி. இவரது மகன் முத்துமாரியப்பன். இவர் எட்டு ஆண்டுகளாக மேற்கு ஆப்பிரிக்க நாட்டில் உள்ள கேமரூனில் உள்ள நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அங்கு அதே நிறுவனத்தில் பணியாற்றி வந்த வால்மி இனாங்கா மொசொக்கேவிற்கும் முத்துமாரியப்பனுக்கும் இடையே காதல் ஏற்பட்டது.
இருவரும் அவர்களது காதலை அவரவர் குடும்பத்திற்கு தெரிவித்துள்ளனர். இரு வீட்டாரும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்து கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த வால்மி இனாங்கா மொசொக்கே, இந்தியாவிற்கு சென்று இந்து முறைப்படி தாலி கட்டி திருமணம் செய்ய வேண்டும் என தனது விருப்பத்தை அவரது வீட்டில் தெரிவித்துள்ளார். இதற்கு அவரது தாயாரும் உறவினர்களும் சம்மதம் தெரிவித்ததையடுத்து உறவினர்கள் 10 பேருடன் இந்தியா வந்து நேற்று கோவை துடியலூர் அருகே உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் உறவினர்கள் புடைசூழ இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது.
இதில் மணமகளுக்கு பட்டுபுடவை அணிவித்து அவரது உறவினர்கள் மணமேடைக்கு அழைத்து வந்தனர். மந்திரங்கள் ஓத ஆப்பிரிக்க மணப்பெண்ணான வால்மி இனாங்கா மொசொக்கேவிற்கு முத்துமாரியப்பன் தாலி கட்டினார்.
தொடர்ந்து இருவரும் மாலை மாற்றிக்கொண்டு அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து திருமணம் செய்து கொண்டனர். இதே போல் கிறிஸ்தவ முறைப்படி இருவரும் ஒருவருக்கொருவர் மோதிரம் அணிவித்து கொண்டு உறவினர்களிடம் ஆசி பெற்றுக்கொண்டனர்.
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.