கோவை பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில்
தீபாவளி கொண்டாட மதுபானம் அருந்திய 3 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பமாக ராஜசேகர் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். முன்பகையால் மதுவில் சயனைடு கலந்து கொலை செய்து இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் கடந்த 4ஆம் தேதி தீபாவளியன்று மதுபானம் அருந்திய 3 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். பெயின்டர் வேலை பார்க்கும் சக்திவேல், பார்த்திபன் மற்றும் சமையல் வேலை பார்க்கும் முருகானந்தம் ஆகிய 3 பேர் மது அருந்திவிட்டு சென்ற நிலையில் உயிரிழந்தனர்.
மதுவில் போதைக்காக தின்னர் கலந்து குடித்து உயிரிழந்து இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்றது. மேலும் பழைய மதுபானம் என்பதால் உயிரிழப்பு ஏற்பட்டதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்றது. இந்நிலையில்
3 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ததில் அதில் சயனைடு கலந்து இருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். முன் விரோதம் காரணமாக மதுவில் ராஜசேகர் சயனைடு விஷத்தை கலந்து இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து ராஜசேகரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ராஜசேகருக்கும் இறந்த மூன்று பேருக்கும் என்ன முன்விரோதம் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தீபாவளியன்று மூன்று பேர் உயிரிழப்பிற்கு அதிகமாக மதுபாதுனம் அருந்தியதே காரணம் என அனைவரும் எண்ணிய நிலையில் திடீர் திருப்பமாக இது முன் விரோதம் காரணமாக நடந்த கொலை என்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஜெய்பீம்: ரூ.5 கோடி நஷ்ட ஈடு வழங்கக் கோரி நடிகர் சூர்யாவுக்கு வன்னியர் சங்கம் நோட்டீஸ்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.