• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கோவையில் பட்டப்பகலில் பள்ளியில் புகுந்து ஆசிரியையிடம் நகை பறிப்பு

கோவையில் பட்டப்பகலில் பள்ளியில் புகுந்து ஆசிரியையிடம் நகை பறிப்பு

கோவை

கோவை

கோவையில் தனியார் பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியையிடம் பத்தரை சவரன் தங்க நகை பறிப்பு. தொப்பி, முக கவசம் அணிந்து வந்த நபர் துணிகரம்

  • Share this:
கோவை தனியார் பள்ளியில் மகனை சேர்க்க விசாரிப்பது  போல் நடித்து ஆசிரியையிடம் இருந்து 10.5 சவரன் தங்க நகையினை பறித்து சென்ற நபர் குறித்து காட்டூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை சித்தாப்புதூர்  வி.கே.கே. மேனன் சாலை வெங்கடசாமி லே அவுட்டை சேர்ந்தவர் பூண்டி. இவரது மனைவி அன்புக்கரசி. இவர் கோவை சின்னசாமி சாலையில் உள்ள ஆச்சார்யா என்ற தனியார்  பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.  அன்புகரசி பள்ளியில் உள்ள ஆசிரியர் அறையில் தனியாக இருந்த போது அங்கு வந்த 35 வயது மதிக்கத்தக்க நபர் தன்னுடைய மகனை பள்ளியில் சேர்ப்பதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவை எனக் கேட்டு விசாரித்துள்ளார்.

ஆசிரியை அன்புக்கரசி  பள்ளியில் மாணவரை சேர்ப்பதற்கான நடைமுறைகள் குறித்து விளக்கிய போது, திடீரென அவர்  மறைத்து வைத்திருந்த கத்தியை ஆசிரியை கழுத்தில் வைத்து நகைகளை கழட்ட சொல்லியுள்ளார்.  இதனால் அதிர்ச்சியடைந்த அன்புகரசி , அவர் அணிந்திருந்த செயின், வளையல், மோதிரம் உட்பட பத்தரை பவுன் நகைகளை கழற்றி திருடனிடம் கொடுத்துள்ளார். இவற்றை எடுத்துக்கொண்டு அந்த நபர் அங்கிருந்து தப்பிச்சென்றார்.

இதையடுத்து ஆசிரியை இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் தெரிவிக்கவே, காந்திபுரம் காட்டூர் காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக  வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிசிடிவி காட்சிகளில் தொப்பி, முக கவசம் அணிந்து வந்த நபர் வருவதும், நகைகளை பறித்து செல்வதும் பதிவாகியுள்ளது. மேலும் இரு சக்கர வாகனத்தில் தப்பி செல்லும் காட்சிகளும் பதிவாகியுள்ளது. இவற்றை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில் ஏற்கனவே மாணவர் சேர்க்கை தொடர்பாக விசாரிப்பது போல. மூன்று பேர் பள்ளிக்கு வந்து நோட்டமிட்டு சென்று இருப்பதும் தெரியவந்துள்ளது. இதன் அடிப்படையில் போலீசார் கத்தியை காட்டி மிரட்டி நகைபறிப்பில் ஈடுபட்ட நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.பள்ளியில் மகனை சேர்ப்பது போல் நடித்து பெண் ஆசிரியரிடம், பள்ளி வளாகத்திலேயே நகை பறிகப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Ramprasath H
First published: