கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கஜேந்திரன் என்ற சிறைக்கைதி , மருத்துவமனை வளாகத்தில் இருந்து தப்பி ஓடினார். இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவையில் கடந்த 2020ம் ஆண்டு ஜூலை மாதம் நல்லாம்பாளையம், டவுன்ஹால், ரயில்நிலையம் ஆகிய இடங்களில் 4 சிறிய கோயில்கள் அடுத்தடுத்து சேதப்படுத்தப்பட்டது. இதுதொடர்பாக சேலத்தைச் சேர்ந்த கஜேந்திரன் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இரு பிரிவுகள் இடையே மோதலை ஏற்படுத்த முயற்சித்தல் உட்பட 3 பிரிவுகளின் கீழ் 4 வழக்குகள் கஜேந்திரன் மீது பதிவு செய்யப்பட்டது.
கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக கோவை மத்திய சிறையில் கஜேந்திரன் அடைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் கடந்த 27 ம் தேதி கொரோனா காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று இரவு சிறை கைதிகளுக்கான வார்டில் இருந்து கஜேந்திரன் தப்பி ஓடினார்.தகவலறிந்த காவல்துறையினர் நகரின் பல்வேறு பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்திய நிலையில், இது குறித்து ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
2020ம் ஆண்டு கோவை சுந்தராபுரத்தில் இருந்த பெரியார் சிலை மீது காவி வர்ணம் பூசப்பட்டது. அதற்கு இரு தினங்கள் கழித்து கோவில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டது. திராவிடர் அமைப்புகளை சேர்ந்தவர்கள் கோவில் சிலையை சேதப்படுத்தியதாக கூறி பா.ஜ.க, இந்து முன்னணி அமைப்பினர் குற்றம்சாட்டி போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில் கஜேந்திரனை கைது செய்த காவல்துறை அவர் எந்த இயக்க பின்னணியிலும் இல்லாதவர் எனவும் மனநிலை பாதிக்கப்பட்டவர் எனவும் தெரிவித்தனர். இதனையடுத்து இந்த விவகாரம் அடங்கிய நிலையில் , தற்போது கஜேந்திரன் அரசு மருத்துவமனை சிறைக்கைதிகள் வார்டில் இருந்து தப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.