பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள முன்னாள் அதிமுக பிரமுகர் அருளானந்தத்தின் ஜாமீன் மனுவை கோவை மாவட்ட மகளிர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இதுவரை பாதிக்கப்பட்ட பெண்கள் 8 பேர் புகார் அளித்துள்ள நிலையில் மேலும் பலர் புகார் கொடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்து, ஆபாசமாகப் படம் எடுத்து மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் ஏற்கனவே திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்த், மணிவண்ணன், சதீஸ் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த 2019ஆம் ஆண்டு நாட்டை உலுக்கிய இந்த வழக்கு சிபிசிஐடி போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் சிபிஐக்கு மாற்றப்பட்டு, சிபிஐ அதிகாரிகள் கோவை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக பொள்ளாச்சி அதிமுக மாணவரணி செயலாளர் அருளானந்தம், ஹேரன் பால், பாபு ஆகிய 3 பேரை கடந்த ஜனவரி 6ஆம் தேதி கைது செய்து விசாரித்த சி.பி.ஐ. அதிகாரிகள் பின்பு, அவர்களை கோவை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர். இதனையடுத்து அருளாணந்தம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.
இதையும் படிங்க: தற்போதைய கொரோனா தடுப்பூசிகள் டெல்டா வகைகளுக்கு எதிராக வேலை செய்யுமா?
வழக்கு விசாரணையின்போது சிறையில் இருந்தபடியே மூவரும் காணொளிக் காட்சி மூலம் நீதிபதிகள் முன்பு ஆஜர் படுத்தப்பட்டு வந்தனர். இந்த நிலையில் முன்னாள் அதிமுக பிரமுகர் அருளானந்தம் மட்டும் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெற்ற போது, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக தற்போது வரை8 பெண்கள் புகார் அளித்துள்ள நிலையில் அருளானந்தத்துக்கு ஜாமீன் வழங்கினால் அவர் சாட்சியங்களை கலைக்க கூடும் என சிபிஐ தரப்பு மகளிர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.
இதனையடுத்து அருளானந்தம் தாக்கல் செய்து இருந்த ஜாமின் மனுவை கோவை மாவட்ட மகளிர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த இரு மாதங்களுக்கு முன்பு வரை பாதிக்கப்பட்ட 5 பேர் மட்டுமே புகார் அளித்திருந்தனர். இரு மாதத்தில் மேலும் 3 பேர் புகார் கொடுத்து இருக்கும் நிலையில் பாதிக்கப்பட்டு புகார் கொடுக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல், கொரோனா ஊரடங்கு காரணமாக சிபிஐ விசாரணை தடைபட்டு இருந்த நிலையில் தற்போது மீண்டும் வேகமெடுக்க துவங்கியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மேலும் சிலபெண்கள் சிபிஐயிடம் புகார் அளிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகின்றது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.