• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கிரைண்டர் தயாரிப்புக்கு கற்கள் தட்டுப்பாடு... தொழில் முடக்கம் - தமிழக அரசு உதவ உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கிரைண்டர் தயாரிப்புக்கு கற்கள் தட்டுப்பாடு... தொழில் முடக்கம் - தமிழக அரசு உதவ உற்பத்தியாளர்கள் கோரிக்கை

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

கோயம்புத்தூரில் கற்கள் தட்டுப்பாட்டால் கிரைண்டர் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது என்று உற்பத்தியாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

  • Share this:
    கோவையில் கிரைண்டர் தயாரிப்பதற்கு முக்கிய மூலப்பொருளான கற்கள் கிடைக்காததால் கிரைண்டர் உற்பத்தியானது கடந்த சில தினங்களாக முழுமையாக முடங்கியது. தமிழக அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு இத்தொழிலை நம்பியுள்ளவர்களை காப்பாற்ற வேண்டும் என கிரைண்டர் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    தொழில் நகரான கோயம்புத்தூர், வெட்கிரைண்டர் தயாரிப்பிலும் முன்னணியில் இருக்கும் நகரம். கோவையில் தயாராகும் கிரைண்டர்களுக்கு புவிசார் குறியீடும் பெறப்பட்டுள்ளது. கோவையில் மட்டும் 600க்கும் மேற்பட்ட கிரைண்டர் உற்பத்தி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மறைமுகமாகவும் ஈடுபட்டு வருகின்றனர். கிரைண்டர் தயாரிப்புக்கு தேவையான முக்கிய மூலப் பொருளான கற்கள், திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பகுதியில் இருந்து வெட்டி எடுத்து கொண்டு வந்து பல ஆண்டுகளாக கிரைண்டர் உற்பத்தியானது செய்யப்பட்டு வருகின்றது.

    இந்நிலையில் ஊத்துக்குளி பகுதியில் இருக்கும் 64 கல் குவாரிகளில் அளவிற்கு அதிகமாக கற்கள் வெட்டி எடுத்ததால் அவற்றிக்கு சீல் வைக்க கடந்த சில தினங்களுக்கு முன்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் கிரைண்டர் உற்பத்திக்கு தேவையான கற்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் கிரைண்டர் உற்பத்தியானது முடங்கிபோய் இருக்கின்றது.

    கிரைண்டருக்கு தேவையான கற்கள் மட்டிமின்றி, ஆட்டாங்கல், அம்மிக்கல் போன்றவையும் உற்பத்தி செய்யப்படவில்லை எனவும், இது தொடர்பாக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றும் எவ்வித நடவடிக்கையும் இல்லை எனவும் 30 ஆயித்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை இந்த அரசு கண்டு கொள்ளாமல் இருப்பதாகவும் கோவை மாவட்ட வெட்கிரைண்டர் தயாரிப்பாளர் சங்கத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.

    ஆண்டிற்கு 400 கோடி ரூபாய் வரை விற்பனை நடைபெறும் இந்த பாரம்பரிய மிக்க தொழிலை காப்பாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாவட்ட வெட்கிரைண்டர் தயாரிப்பாளர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். முக்கிய மூலப்பொருளாக கற்கள் கிடைக்காமல் இருப்பது ஒரு புறம் இருந்தாலும் மற்றொரு புறம் கிரைண்டர் தயாரிப்புக்கு தேவையான மூலப்பொருட்களும் கட்டுப்பாடு இல்லாமல் விலை உயர்ந்து வருவதாக கிரைண்டர் தயாரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    "ஸ்டெயின்லஸ் ஸ்டீல்" உட்பட கிரைண்டர் தயாரிப்புக்கு தேவையான மூலப்பொருட்கள் பல மடங்கு விலை உயர்ந்து போனதால் இந்த தொழிலில் இருப்பவர்கள் கடும் நெருக்கடியில் சிக்கி இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். மூலப்பொருட்கள் அடிக்கடி விலை உயர்வதை தடுக்க கண்காணிப்பு குழு அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கிரைண்டர் தயாரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு மாதமாக கற்கள் கிடைக்காதால் கிரைண்டர் உற்பத்தி முழுவதுமாக முடங்கி இருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

    ஊத்துக்குளி பகுதியில் கிடைக்கும் கற்கள் மிக தரமானவையாக இருப்பதுடன் மாவு அரைப்பதற்கு ஏற்றபடி இருக்கும் எனவும் மற்ற பகுதிகளில் கிடைக்கும் கற்கள் இந்த அளவிற்கு தரமானதாக இருக்காது எனவும் தொழில் முனைவோர் தெரிவிக்கின்றனர். அரசின் கனிம வளச் சட்டத்தில் சிறு மாற்றம் செய்து கொடுத்தால் மீண்டும் இந்த தொழிலை வழக்கம் போல செயல்படித்த இயலும் எனவும் தெரவிக்கும் தொழில் முனைவோர், கோவையில் புவிசார் குறியீடு பெற்ற கிரைண்டர் உற்பத்தி தொழில், மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப தமிழ்நாடு அரசு சட்ட ரீதியான உதவிகளை செய்ய வேண்டும் எனவும் கோவை மாவட்ட கிரைண்டர் தயாராப்பாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: