கோவை குனியமுத்தூர் பகுதியில் 5 நாட்களாக குடோனில் பதுங்கி இருந்த சிறுத்தை நள்ளிரவில் கூண்டிற்குள் வந்த போது சமயோசிதமாக செயல்பட்ட வன ஊழியர்கள் கூண்டை மூடி சிறுத்தையை பிடித்தனர்.
கோவை மாவட்டம் மதுக்கரையொட்டிய வனப்பகுதியில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியேறிய மூன்று வயது மதிக்கதக்க ஆண் சிறுத்தை குனியமுத்தூர் பகுதியில் உள்ள குடோனில் பதுங்கி கொண்டது.இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சிறுத்தையை உயிருடன் பிடிக்க முயற்சிகள் மேற்கொண்டனர். குடோனை சுற்றி வலை விரிக்கப்பட்டும், குடோனில் 2 வாயில்களிலும் இரண்டு கூண்டுகள் வைத்தும் சிறுத்தையை பிடிக்க முயற்சி மேற்கொண்டனர்.சிசிடிவி கேமராக்கள் மூலமும் சிறுத்தையின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டது.
கூண்டு வைத்து 5 தினங்களாக வனத்துறையினர் காத்திருந்த போதிலும் கூண்டில் சிக்காமல் சிறுத்தை போக்கு காட்டி வந்தது.கோவை வனத்துறையினரும் சிறுத்தை தானாக கூண்டில் வந்து சிக்கும் வரை பொறுமை காத்தனர். சிறுத்தை மிகவும் எச்சரிக்கை உணர்வுடன் கூண்டிற்குள் வராமல் இருந்து வந்தது. 5 நாட்களாக உணவு, தண்ணீர் போன்றவை இல்லாமல் இருந்த சிறுத்தை உணவுக்காக குடோனில் இருந்து வெளியேற முயன்றது. 6 வது நாளான நேற்று குடோன் வாயிலில் வைக்கப்பட்டிருந்த கூண்டு பகுதிக்கு சிறுத்தை வந்தது.
சிசிடிவி கேமரா மூலம் சிறுத்தையின் நடவடிக்கைகளை கண்காணித்து வந்த வனத்துறையினர் சிறுத்தை முழுமையாக கூண்டிற்குள் வந்தவுடன் கதவை மூட தயாராக இருந்தனர். சிறுத்தை மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் கூண்டிற்குள் வந்த நிலையில் வன ஊழியர்கள் சமயோசிதமாக செயல்பட்டு கூண்டின் கதவை அடைத்ததால் சிறுத்தை கூண்டில் சிக்கிக் கொண்டது. இதனையடுத்து கோவை மண்டல கூடுதல் தலைமை வனப்பாதுகாவலர் ராமசுப்பிரமணியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சிசிடிவி காட்சி
சம்பவ இடத்திற்கு வந்த அவர் வனத்துறையினரின் செயலை பாராட்டினார். இதனையடுத்து சிறுத்தையை பத்திரமாக அடர் வனப்பகுதிக்குள் கொண்டு சென்றுவிட வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். மேட்டுப்பாளையம் பகுதிக்கு சிறுத்தையை கொண்டு சென்று அதிகாலை சிறுத்தையை விடுவிக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.மயக்க ஊசி செலுத்தாமல் ஐந்து நாட்களாக பொறுமையுடன் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்தபடி இருந்து அதை உயிருடன் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விளாத்திக்குளம் கோவில் பெண்கள் குளியலறையில் ரகசிய கேமரா.. பக்தர்கள் அதிர்ச்சி இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.