கோவை விமான நிலையம் அருகே துரைசாமி நகர் பகுதியில் இருக்கும் கோவிலில் பிறந்து சில தினங்களே ஆன ஆண் குழந்தையை அடையாளம் தெரியாத நபர்கள் கட்டைப் பையில் வைத்து விட்டு சென்றனர். தகவலறிந்து மாநகராட்சி அதிகாரிகளும், பீளமேடு போலீசாரும் குழந்தையை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
கோவை விமான நிலையம் அருகே துரைசாமி நகரில் ராஜகணபதி கோவில் உள்ளது. இந்த கோவிலில் பிறந்து சில தினங்களே ஆன குழந்தை கட்டைபையில் வைக்கப்பட்டு இருப்பதாக காவல் துறையினருக்கும், மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதனைத்தொடர்ந்து பீளமேடு காவல்துறையினரும், சுகாதார ஆய்வாளர் ராமகிருஷ்ணனும் கோவிலுக்கு சென்று குழந்தையை மீட்டனர். இதனையடுத்து உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு குழந்தை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. குழந்தையை யார் கொண்டு வந்து விட்டுச் சென்றார்கள் என்பது குறித்து பீளமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை காவல் துறையினர் ஆராய்ந்து வருகின்றனர். பிறந்து சில தினங்களே ஆன பச்சிளம் குழந்தை, கட்டைபையில் வைக்கப்பட்டு கோவிலில் விட்டுச் சென்ற சம்பவத்தால் கோவிலில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.