கோயம்புத்தூரில் மத்திய அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் கணபதி ஹோமம் முதலில் பாடப்பட்டு பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தேசிய கயிறு வாரியம் சார்பில் 2 நாட்கள் தேசிய கயிறு மாநாடு நடைபெறுகிறது. இதில் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் கயிறு சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வரும் தொழில் முனைவோர் கலந்து கொண்டுள்ளனர்.
இம்மாநாட்டில், கயிறு தொழிலை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளும் கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதே போல் கடந்த 4 ஆண்டுகளில் சிறந்த முறையில் தொழிலில் ஈடுபட்ட தொழில் முனைவோர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு பாராட்டப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் நாராயண் ரானே, இணை அமைச்சர் பானு பிரதாப் சிங் வெர்மா, தமிழக சிறு, குறு, நடுத்தர தொழில்கள் மற்றும் நகர்புற வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், கயிறு வாரிய தலைவர் குப்புராமு, கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: நீலகிரியில் கண்ணிமைக்கும் நேரத்தில் சாலையை கடந்த புலி - வைரலாகும் வீடியோ
நிகழ்ச்சிக்கு முன்னர் வழக்கமாக பாடப்படும் தமிழ் தாய் வாழ்த்து பாடப்படாமல் கணபதி ஹோமம் பாடப்பட்டது. பின்னர்தான் தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் அமைச்சர்கள் இந்தியிலேயே பேசியதால் கூட்டத்தில் அமர்ந்திருந்தவர்கள் தங்களுக்குள் பேசியபடியும் மொபைல் போனை பயன்படுத்தியபடியும் அமர்ந்திருந்தனர்.
தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பாக சர்ச்சை எழுந்தப்போது, தமிழ்த்தாய் வாழ்த்து படலை இசைப்பதற்கு பதிலாக பாட வேண்டும் என்றும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்படும்போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது. இந்நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு முன்பாக கணபதி ஹோமம் பாடப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: ஆதிகேசவ பெருமாள் திருக்கோவிலில் ஆமைவேகத்தில் நடைபெறும் திருப்பணி... கும்பாபிஷேகம் நடைபெறுமா என பக்தர்கள் கேள்வி
பொது நிகழ்ச்சியில் கணபதி ஹோமம் பாடப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு கணபதி ஹோமம் அனைவருக்கும் பொதுவானது என அமைச்சரின் உதவியாளர் தெரிவித்தார்.
செய்தியாளர்: ஜெரால்ட்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Tamil, Tamilnadu govt