கோவையில் யானை வழித்தடம் பாதுகாப்பு: மேலும் 1,049 ஹெக்டேர் நிலங்கள் வனப்பகுதியாக அறிவிப்பு!

மாதிரிப் படம்

கோவையில் வனப்பரப்பளவு அதிகரிப்பு, யானைகள் வழித்தடம் பாதுகாக்கப்பட்டது என 30 நாட்களில் கோவை மாவட்ட ஆட்சியர் நகராஜன் ன் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கைக்கு வன ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

  • Share this:
கோவை மாவட்டத்தில் வேறு துறைகளின் கீழ் இருந்த 1049 ஹெட்டேர் நிலத்தை வனத்துறையின் கீழ் கொண்டு வந்து நடவடிக்கை மேற்கொண்டததற்கும்,  கல்லார் - மேட்டுப்பாளையம் யானைகள் வழித்தடத்தில் 50.79  ஹெக்டேர் தனியார் நிலத்தை தனியார் வனபாதுகாப்பு சட்டத்தின் கீழ் கொண்டு வந்ததற்கும் வன ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

கோவை வனக்கோட்டம் 69,000 ஹெக்டேர் பரப்பளவு கொண்டது. இந்நிலையில் பல்வேறு துறைகளின் கீழ்  மேட்டுப்பாளையம், ஆனைமலை, பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் வனத்தையொட்டி இருந்த   1049 ஹெக்டேர் பகுதிகளை  வனப்பகுதியுடன் இணைத்து கோவை மாவட்ட ஆட்சியர் உத்திரவிட்டுள்ளார். மேலும் கல்லார் - மேட்டுப்பாளையம் யானை வழித்தடத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான 50.79 ஹெக்டேர் நிலத்தை தனியார் வனமாக, 1949 ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் வனப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கொண்டு வந்தும் மாவட்ட ஆட்சியர் நாகராஜன் உத்திரவிட்டார்.

இது  தனியார் வனபாதுகாப்பு சட்டத்தின் கீழ்  தமிழகத்தில் கொண்டு வரப்பட்ட முதல் யானைகள் வழித்தடமாகும். கோவை மாவட்ட ஆட்சியரின் இந்த நடவடிக்கைகளுக்கு சுற்றுசூழல் மற்றும் வன அர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். கோவை மாவட்டத்தில் கடந்த 30 நாட்களில் தமிழக அரசு  இரு முக்கிய நடவடிக்கைகள் எடுத்துள்ளது எனவும், குறிப்பாக கல்லார் - மேட்டுப்பாளையம் யானைகள் வழித்தடம்  தனியார் வனபாதுகாப்பு சட்டத்தின் கீழ் கொண்டு வந்து இருப்பது முக்கியமானது எனவும் ஒசை அமைப்பின் தலைவர் காளிதாஸ் தெரிவித்தார்.

குறிப்பாக தமிழகம், கேரளா, கர்நாடக மாநிலங்களில் உள்ள யானைகள் சென்று வரும் வழித்தடங்களில் முக்கியமானது எனவும் இந்த பாதையில் உள்ள தனியார் இடங்களை தனியார் வனப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கொண்டு வந்திருப்பதை மகிழ்ச்சியாக வரவேற்கின்றோம் எனவும் ஓசை காளிதாஸ் தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

நீண்ட நாட்களாகவே யானை வழித்தடங்களை மீட்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வரும் நிலையில்,தென்னிந்தியாவில் உள்ள  யானைகள்  வழித்தடத்தில் கல்லார் மேட்டுப்பாளையம் வழித்தடம் முக்கியமானது எனவும்,  மீதமுள்ள யானைகள் வழித்தடங்களையும்  மீட்க வேண்டும் எனவும் இயற்கை பாதுகாப்பு சங்கம் தலைவர் ஜலாலுதீன் தெரிவித்தார். யானைகள் வழித்தடங்கள் மறிக்கப்படுவதாலும், ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருப்பதாலும் யானை மனித மோதல் ஏற்படுவதாகவும், பாரம்பரிய யானை வழித்தடங்களை மீட்க வேண்டும் எனவும் ஜலாலுதீன் தெரிவித்தார்.

கல்லார்  மேட்டுப்பாளையம் யானைகள் வழித்தடம் பாதுகாக்கப்பட்டது துவக்க புள்ளி எனவும், இதே போல  தோட்டக்கலை துறைக்கு சொந்தமான இடத்தையும்  விட்டு கொடுக்க வேண்டும் எனவும் வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதே போல  தமிழகம் முழுவதும் யானைகளின் வலசை பாதைகளை மீட்கவும், புதிய பாதைகளை அங்கீகரிக்கவும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டு்ம் எனவும் வன ஆர்வலர்கள் தமிழ்நாடு  அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 30 நாட்களில் இரு நடவடிக்கையினையும் மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் நாகராஜனை வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் பாராட்டி புத்தகத்தினை பரிசாக வழங்கினார்.
Published by:Murugesh M
First published: