கோவையில் சிக்கிய போதை மாத்திரை விற்பனை கும்பல்!

போதை மாத்திரை கும்பல் கைது

விசாரணையில் Tydol 100mg மாத்திரையை கரைத்து ஊசியின் மூலம் உடம்பில் செலுத்தி போதையை ஏற்படுத்திக்கொள்ள முடியும் என்பது தெரியவந்துள்ளது.

  • Share this:
கோவையில் போதை மருந்து மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட நான்கு பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 650 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில்  ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும், பல்வேறு பகுதிகளில் போதை ஊசி போடும் பழக்கம் அதிகரித்து வருவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக கோவை மாநகர காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் சாய்பாபா காலனி அருகே கோவில்மேடு தவசி நகர்ப்பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்பவர்களின் நடமாட்டம் இருப்பதாக  கிடைத்த தகவலை தொடர்ந்து அப்பகுதியில் கண்காணிப்பை போலீசார் அதிகப்படுத்தி இருந்தனர்.

இந்நிலையில் அந்த பகுதியில் சாலையோரம் நின்றிருந்த காரில் இருந்த நான்கு பேரிடம் , ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சோதனை மேற்கொண்டனர். வாகனத்தை சோதனையிட்டதில் வலி நிவாரணத்திற்காக உட்கொள்ளக் கூடிய மாத்திரைகள் மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இன்றி அதிக அளவில் வாகனத்தில்  வைத்திருப்பது தெரியவந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதனையடுத்து சந்தேகத்திற்கிடமான 4 பேரையும் சாய்பாபா காலனி காவல் நிலையத்துக்கு அழைத்து வந்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் Tydol 100mg மாத்திரையை கரைத்து  ஊசியின் மூலம் உடம்பில் செலுத்தி போதையை ஏற்படுத்திக்கொள்ள முடியும் என்பதும் , இந்த மாத்திரையை போதை ஊசி போடும் நபர்களுக்கு ஆயிரம் ரூபாய் முதல் இரண்டாயிரம் ரூபாய் வரை விற்பனை செய்து வந்து இருப்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து கவுண்டம்பாளையத்தை சேர்ந்த ஜானகி ராமன், டிவிஎஸ் நகரை சேர்ந்த பார்த்திபன், இடையர்பாளையத்தை சேர்ந்த கபிலேஷ், குனியமுத்தூரை சேர்ந்த முகமது அப்சல் ஆகிய நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்தனர். இவர்கள் நகரின் பல்வேறு பகுதிகளில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் , இது பயன்படுத்துவது எளிது என்பதாலும் எந்த வித வாசனையும் வராது என்பதாலும் ஏராளமான இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் இதற்கு அடிமையாகி இருப்பதும்  விசாரணையில் தெரியவந்தது.

Also read: தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் தவிர இதர கட்டணங்களை வசூலிக்கத் தடை விதியுங்கள்: எம்.பி ரவிக்குமார் கோரிக்கை

இதனையடுத்து அவர்களிடமிருந்து 650 போதை மாத்திரைகள், 11,500 ரூபாய் ரொக்க பணம் மற்றும் போதை மாத்திரை விற்பனைக்கு பயன்படுத்திய கார் ஆகியவற்றை பறிமுதல் செய்த சாய்பாபா காலனி  போலீசார் அவர்களை நீதிபதி இல்லத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கோவை நகரில் சமீபகாலமாக இது போன்ற போதை மாத்திரை கும்பல்கள் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து விற்பனையில் இறங்கி இருப்பதாகவும் இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும், இதன் பின்னணியில் உள்ள நபர்களையும் கண்டறிந்து காவல் கட்டுப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Published by:Esakki Raja
First published: