பிற பணிகளில் இருக்கும் தூய்மைப் பணியாளர்கள் உடனடியாக துப்புரவு பணிக்கு செல்லவேண்டும் - கோவை மாநகராட்சி ஆணையர் உத்தரவு

கோவை மாநகராட்சி

கோவை மாநகராட்சியில் பிற பணிகளில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள் உடனடியாக துப்பரவு பணிக்கு திரும்ப வேண்டும் என்று கோவை மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

  • Share this:
கோவை மாநகராட்சியில் தூய்மை பணியாளராக நியமிக்கப்பட்டு , அரசியல் செல்வாக்கு காரணமாக தூய்மை பணிக்கே செல்லாமல்  மாநகராட்சி அலுவலங்களில் பணிபுரிந்து வந்த 325 பேரை தூய்மை பணிக்கு உடனடியாக திரும்ப மாநகராட்சி நிர்வாகம்  உத்திரவிட்டுள்ளது. இதை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் வரவேற்றுள்ளனர்.

கோவை மாநகராட்சியில் காலியாக இருந்த 549 தூய்மை பணியாளர் பணியிடங்களில், 325 தூய்மை பணியாளர் பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் நேரடியாக பணி நியமனம் செய்யப்பட்டது. கல்வி தகுதி தேவையில்லை, அனைத்து சாதியினரும் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டு நேரடியாக நியமனம் செய்யப்பட்ட 325 பேரையும், தூய்மை பணிக்கு அனுப்பாமல் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் அலுவலக பணிக்காக மாநகராட்சி நிர்வாகத்தினர் பயன்படுத்தி வந்தனர்.

தூய்மை பணியாளராக தேர்வு செய்யப்பட்ட 325 பேரும் குப்பை அள்ளும் பணிக்கு செல்லாமல், மாற்றுப்பணியாக கொரோனா மையங களில் உதவியாளர் பணி, அலுவலகங்களில் உதவியாளர் என வேலை பார்த்து வந்தனர்.

இந்நிலையில்  தூய்மைப் பணியாளராக தேர்வு செய்யப்பட்ட 325 பேரையும் தூய்மைப் பணிக்கு அனுப்ப வேண்டும் என பல்வேறு தூய்மை பணியாளர் சங்கத்தினர் தொடர்ந்து வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

கோயம்புத்தூர் மாநகராட்சி அலுவலகம்


கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக நீதி கட்சியினர் 325 தூய்மை பணியாளர்களை தூய்மை பணிக்கு அனுப்ப கோரி மாநகராட்சி அதிகாரிகளுக்கு தாம்பூல தட்டில் வெற்றிலை பாக்கு வைத்து மனு அளித்து போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இந்நிலையில் தூய்மைப் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு மாற்று பணியில் இருக்கும் அனைவரும் உடனே தூய்மை பணிக்கு திரும்ப வேண்டும் என கோவை மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா உத்திரவிட்டுள்ளார்.

மாநகராட்சி பகுதியில் சுகாதாரப் பணிகள் தேக்கமடையும்  நிலையில் மாற்று பணியில் இருந்த 325 தூய்மைப் பணியாளர்களும் தூய்மைப் பணிக்கு திரும்ப வேண்டும் எனவும், தூய்மைப் பணிக்கு திரும்பாத தூய்மைப் பணியாளர்களின் பட்டியலை இரு தினங்களில் அனுப்பி வைக்க வேண்டும் என மண்டல அதிகாரிகளுக்கு மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா உத்திரவிட்டுள்ளார். இந்த உத்திரவிற்கு தூய்மை பணியாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

கோவை மாநகராட்சியில் தேர்வு செய்யப்பட்ட 325 தூய்மை பணியாளர்களும் ஒரு நாள் கூட தூய்மை பணிக்கு வந்ததில்லை எனவும் இது மாநகராட்சி ஆணையர் கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையில், அனைவரும் தூய்மை  பணிக்கு செல்ல உத்திரவிட்டு இருப்பதை சமூக நீதி உத்திரவாக பார்ப்பதாக சமூகநீதி கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

தூய்மை பணிக்கு தேர்வு செய்யப்பட்ட பிற சாதியினர் மட்டும் அலுவலக பணியில் இருந்த நிலையில், மாநகராட்சி  ஆணையரின் உத்தரவால் அனைத்து சாதியினரும் துப்புரவு பணிக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இது வரவேற்கதக்கது எனவும் சமூக நீதி கட்சி தலைவர் பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தூய்மை பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருப்பதாகவும், எதனால் வேலைப்பளு அதிகம் என தெரியாமல் அதிகாரிகள் சொன்ன வேலையை செய்து வந்த்தாகவும், 325 பேர் வேலைக்கே வராமல் இருந்ததனால் வேலை பளு அதிகமாக இருந்ததே இப்பத்தான் தெரியவந்து இருப்பதாகவும், இன்று முதல் 325 பேரும் வேலைக்கு வந்ததால் வேலைப் பளு குறையத் துவங்கி இருப்பதாகவும் மாநகராட்சி ஒப்பந்த பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 
Published by:Karthick S
First published: