கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க கூடுதல் கட்டணம்: கோவையில் அதிகரிக்கும் புகார்!

அதிக கட்டண புகார்

கோவையில் தனியார் மருத்துவமனைகள் கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க கூடுதல் கட்டணங்களை வசூலிப்பதாக புகார் எழுந்துள்ள நிலையில், இது குறித்து விசாரிக்க வட்டாட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

  • Share this:
கோவையில் கொரொனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக மேலும் ஒரு மருத்துவமனை மீது பாதிக்கபட்ட நபர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.இது வரை 4 தனியார் மருத்துவமனைகள் மீது புகார்கள் வந்துள்ள நிலையில் இது குறித்து விசாரிக்க மாவட்ட ஆட்சியர் நாகராஜன் உத்தரவிட்டுள்ளார்.

கோவையில் கொரொனா தொற்று அதிகம் பரவி வரும் நிலையில் , மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி இருக்கின்றன. இந்நிலையில் இந்த தொற்றை சாதகமாக பயன்படுத்தி தனியார் மருத்துவமனைகள்  சில அதிக கட்டணம் வசூல் செய்கின்றன. இந்நிலையில் நேற்று சுங்கம் பகுதியில் உள்ள மனு மருத்துவமனையில் கொரொனா தொற்றால் சிகிச்சை பெற்று உயிரிழந்த காதர் என்பவருக்கு 20 லட்ச ரூபாய் கட்டணம் விதித்தனர். 16 லட்ச ரூபாய் செலுத்திய நிலையில் மீதமுள்ள 4 லட்ச ரூபாயை செலுத்திவிட்டு உடலை பெற்றுகொள்ளும் படி அந்த மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இது தொடர்பாக அரசு அதிகாரிகளின் கவனத்திற்கு சென்ற நிலையில் உடலை பெற்று உறவினர்களிடம் கொடுத்த அதிகாரிகள் , பாதிக்கப்பட்ட நபர்கள் கொடுத்த புகாரின் பேரில் மனு மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே இதே போல அதிக கட்டணம் வசூல் செய்ததாக சரவணம்பட்டி பகுதியை சேர்ந்த முத்தூஸ் மருத்துவமனை மீது இன்று நதீம் என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தார். பின்னர் பேட்டியளித்த அவர்,
கொரொனா தொற்று காரணமாக தனது தந்தை ஷாஜகானை ஏப்ரல் 29ம் தேதி முத்தூஸ் மருத்துவமனையில் சேர்த்தாகவும், அடுத்த சில தினங்களில் தனக்கும் தொற்று ஏற்பட்டதால் அதே மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றதாகவும் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

தனது தந்தை அங்கு 21 நாள் சிகிச்சையில் இருந்த நிலையில் மே 20ம் தேதி மருத்துவமனையில் உயிரிழந்த நிலையில் அந்த தகவலை தெரிவிக்காமல் ,16 லட்ச ரூபாய் கட்டணத்தை செலுத்தும் படி நிர்பந்தம் செய்துள்ளனர். இது தொடர்பாக ஆட்சியரிடம் புகார் அளித்தவுடன் உடலை கொடுத்து விட்டதாகவும், பின்னர் தங்களுடைய இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு 16 லட்ச ரூபாய் கட்டணம் என அனுப்பி ,அதை அவர்கள் ஏற்காத நிலையில் தற்போது 11.50 லட்ச ரூபாய்க்கு பில் கொடுத்து இருப்பதாகவும், தனக்கு கட்டணமாக 2.35 லட்ச ரூபாய் விதித்து இருப்பதாக கூறிய நஜீம் , பொது மக்கள் யாரும் ஏமாறக் கூடாது என்பதற்காகவே முத்தூஸ் மருத்துவமனை மீது புகார் அளித்து இருப்பதாவும் தெரிவித்தார்.

கோவையில் கொரொனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் மனு மருத்துவமனை, முத்தூஸ் மருத்துவமனை உட்பட நான்கு தனியார் மருத்துவமனைகள் மீது பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ள நிலையில், இது குறித்து விசாரணை மேற்கொள்ள வட்டாட்சியர் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடைபெற்று வருகின்றது. 4 தனியார் மருத்துவமனைகளிலும் விசாரணை நடத்திய பின்பு மருத்துவமனை நிர்வாகங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் நாகராஜ் குழு உத்திரவிட்டுள்ளார்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Murugesh M
First published: