நகை பறிப்பில் ஈடுபட்டு சிக்கிய காதலர்கள்.. ஆன்லைன் சூதாட்டத்தால் எதிர்காலத்தை தொலைத்த கல்லூரி மாணவர்கள்.. கோவையில் அதிர்ச்சி..
நகை பறிப்பில் ஈடுபட்டு சிக்கிய காதலர்கள்.. ஆன்லைன் சூதாட்டத்தால் எதிர்காலத்தை தொலைத்த கல்லூரி மாணவர்கள்.. கோவையில் அதிர்ச்சி..
காதல் ஜோடி கைது
Coimbatore: கோவை தொண்டாமுத்தூரில் ஆடு மேய்க்கச் சென்ற மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட கல்லூரி மாணவ, மாணவியை தொண்டாமுத்தூர் போலீசார் கைது செய்தனர்.
கோவை தொண்டாமுத்தூரை சேர்ந்தவர் காளியம்மாள் (65). இவர் கடந்த 28 ஆம் தேதி தொண்டாமுத்தூர் தீயணைப்பு நிலையம் பின்புறம் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அங்கு இரு சக்கர வாகனத்தில் இளைஞர் மற்றும் இளம்பெண் வந்துள்ளனர். அப்போது இரு சக்கர வாகனத்தை இளம்பெண் ஓட்டியுள்ளார். அந்த இளம்பெண் வண்டியில் இருந்தவாறு காளியம்மாளிடம் கோவிலுக்கு செல்ல வழி கேட்பது போல பேச்சுக் கொடுத்துள்ளார். அப்போது பின்னால் இருந்த இளைஞர் காளியம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 5 1/2 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டார்.
இதையடுத்து இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இது குறித்து காளியம்மாள் தொண்டாமுத்தூர் போலீசில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து ஆய்வாளர் ஆனந்தகுமார், தலைமையில் உதவி ஆய்வாளர் அருள்பிரகாஷ் உள்ளிட்ட தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டார். அப்போது அப்பகுதியில் இருந்த சுமார் 20க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை கொண்டு ஆய்வு மேற்கொண்டு செயின் பறிக்க பயன்படுத்திய பைக்கின் எண்ணை வைத்து கோவை சுங்கம் பைபாஸ் பகுதியை சேர்ந்த தேஜஸ்வினி (20). என்ற மாணவியை பிடித்தனர்.
அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் தனியார் கல்லூரியில் தகவல் தொழிற்நுட்பத்துறையில் 3ம் ஆண்டு படித்து வருவதாகவும், தன்னுடன் படித்து வரும் வடவள்ளி சோமையம்பாளையத்தை சேர்ந்த பிரசாத் (20). என்பவருடன் சேர்ந்து செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து பிரசாத்தை பிடித்த தனிப்படை போலீசார் இருவரையும் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தனர்.
அப்போது இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும், மொபைல் செயலி மூலம் சூதாட்டத்தில் ஈடுபட்டு பல லட்சம் ரூபாயை இழந்துள்ளது தெரியவந்தது. மேலும் இதற்காக சக மாணவர்களிடம் கடனாக பணத்தை வாங்கி சூதாடிய நிலையில் பணத்தை திருப்பிதர முடியாததாலும், ஆடம்பரமாக சுற்ற பணம் தேவைப்பட்டதால் புறநகர் பகுதியை தேர்வு செய்து செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.
பிரசாத் தனது வீட்டில் ஏற்கனவே 30 பவுன் நகையை திருடி செலவழித்ததும், தேஜஸ்வினி தனது வீட்டில் இருந்த 15 பவுன் நகையை திருடி விற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த 5 1/2 பவுன் நகையை பறிமுதல் செய்தனர். மேலும் இருவரையும் நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஆடம்பர வாழ்க்கைக்காக செயின் பறிப்பில் ஈடுபட்ட கல்லூரி மாணவ, மாணவியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
செய்தியாளர்: சுரேஷ் (கோவை)
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.