கோவை மாவட்டம் அன்னூரில் சரவணசுந்தரம் என்ற திமுகவை சேர்ந்த பைனான்சியர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இந்து முன்னணி அமைப்பின் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் உட்பட மேலும் இருவரை அன்னூர் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை மாவட்டம் அன்னூரை அடுத்துள்ள நாகம்மாபுதூர் பகுதியை சேர்ந்தவர் சரவண சுந்தரம். இவர் அன்னூரில் இந்து முன்னணி அமைப்பின் வடக்கு மாவட்ட செயலாளரான ராஜேந்திரன் எப்பவருக்கு சொந்தமான பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அதில் இருந்து விலகி தனியாக பைனான்ஸ் நிறுவனம் துவங்கினார். மேலும் இந்து முன்னணி அமைப்பில் இருந்து விலகி திமுகவிலும் சேர்ந்தார்.
இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவருக்கும் சரவண சுந்தரத்திற்கும் பணம் கொடுக்கல் வாங்கலில் பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
ஒரு லட்ச ரூபாய் பணத்தை திருப்பித் தராமல் இருந்ததால் தமிழ்ச்செல்வனை சரவண சுந்தரம் பணத்தை திருப்பி கேட்டு வந்துள்ளார். இந்நிலையில் தமிழ்செல்வன் அன்னூரை அடுத்த மைல்கல் பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த சரவண சுந்தரத்தை , இந்து முன்னணியில் இருக்கும் தனது நண்பரான ராஜராஜனுடன் சேர்ந்து 27 ம் தேதி வெட்டிக்கொன்றார். பின்னர் தமிழ்ச்செல்வன், ராஜராஜன் இருவரும் நேரடியாக அன்னூர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.
சரவண சுந்தரத்தின் கொலைக்கு பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வரும் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராஜேந்திரன்தான் காரணம் என கூறி சரவணசுந்தரத்தின் உறவினர்கள் மறியல் நடத்தினர். இதனையடுத்து சரவணசுந்தரம் முதலில் வேலை பார்த்த அன்னூர் சூர்யா தேவி பைனான்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர்கள் ரங்கநாதன், ராஜேந்திரன் ஆகியோரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் இந்தக் கொலைக்கு தூண்டுதலாக இருந்தது தெரியவந்தது.
தங்களிடமிருந்து தனியாக சென்று பைனான்ஸ் தொழில் நடத்தியதால் ஆத்திரம் அடைந்து அவரை கொலை செய்ய திட்டமிட்ட இவர்கள் , பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையை பயன்படுத்தி தமிழ்செல்வன், ராஜராஜன் மூலம் கொலையை நிகழ்த்தி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து இந்து முன்னணி வடக்கு மாவட்ட செயலாளரான ராஜேந்திரன் மற்றும் ரங்கநாதன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது கொலை கூட்டுசதி உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.