Oxygen Demand | கோவையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உருக்காலை தொழில் பாதிப்பு

Youtube Video

கோவையில் தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் ஆக்சிஜன் நிறுத்தப்பட்டதால், உற்பத்தி பாதிக்கப்பட்டு தொழில் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தொழில்முனைவோர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதை கருத்தில் கொண்டு, குறைந்தது 30 விழுக்காடு ஆக்சிஜன் வழங்க வேண்டும் என கோரியுள்ளனர்.

  • Share this:
நாடு முழுவதும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், தொழில் கூடங்களுக்கான ஆக்சிஜன் தயாரிப்பை நிறுத்தி விட்டு, மருத்துவ தேவைக்கான ஆக்சிஜனை உற்பத்தி செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், தொழில்கூடங்களுக்கு ஆக்சிஜன் வழங்குவது கடந்த 22-ம் தேதி முதல் நிறுத்தப்பட்டது.

தொழில் கூடங்களுக்கு ஆக்சிஜன் விநியோகம் நிறுத்தப்பட்டதால் தொழில் நகரான கோவையில் தொழில் துறை பாதிப்படைய தொடங்கி உள்ளதாக தொழில்முனைவோர் தெரிவிக்கின்றனர். கையிருப்பில் உள்ள ஆக்சிஜன் மூலம் மட்டுமே உலோகம் உருக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், சர்வதேச நிறுவனங்கள், ரயில்வே நிறுவனங்களுக்கான உலோக ஆர்டர்களை உரிய காலத்தில் முடிக்க முடியாமலும், வெளிநாட்டு ஆர்டர்களை குறிப்பிட்ட நேரத்திற்குள் அனுப்ப முடியாமலும் உருக்காலை தொழில் முடங்கியுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.

மருத்துவ தேவை போக, தொழில்கூடங்களுக்கு 30 விழுக்காடு ஆக்சிஜன் வழங்கும் வகையில், தற்போது செயல்பாட்டில் உள்ள ஆக்சிஜன் ஆலைகளை திறக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

கடந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனா பாதிப்பில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், இரண்டாவது அலையால் உலோகம் உருக்கும் தொழில் மேலும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உலோகத்தை உருக்குவதற்கு லேசர்கட் செய்ய முக்கியமான தேவை ஆக்சிஜன் தான். ஆனால், ஆக்சிஜன் பற்றாக்குறையால் இத்தொழிலே முடங்கியுள்ளதாக உருக்காலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.


மேலும் படிக்க... Trichy Power Cut: திருச்சியில் நாளை (27-04-2021) முக்கிய பகுதிகளில் மின்தடை

கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் அவசியம் என்பதில் மாற்று கருத்தில்லை என தெரிவிக்கும் தொழில் முனைவோர், உருக்காலைகளுக்கு 30 சதவீத விநியோகம் இருந்தால் கூட ஒரளவு நிலைமையை சமாளித்து கொள்ள முடியும் என தெரிவிக்கின்றனர். எனவே, உருக்காலைகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் கிடைப்பதை உறுதி செய்ய கோரியுள்ளனர்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: