தமிழகத்தில் முழு ஊரடங்கு : பேருந்து வசதி செய்து தரப்படாததால் தவிக்கும் தூய்மை பணியாளர்கள்

தூய்மை பணியாளர்கள்

கோவையில் முழு ஊரடங்கு அமல்படுத்தபட்டுள்ள நிலையில், தூய்மை பணியாளர்களுக்கு போதிய பேருந்து வசதிகள் செய்து தரப்படாததால் பணி ஒதுக்கப்பட்டுள்ள இடங்களுக்கு செல்ல முடியாமல் துப்புரவு பணியாளர்கள் தவிப்புக்குள்ளாகினர்.

 • Share this:
  கோவை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளது. இவற்றில் சுமார் 2000க்கும் மேற்பட்ட ஒப்பந்த மற்றும் நிரந்த தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் புறநகர் பகுதிகளில் இருந்து துப்புரவு பணியாளர்கள் வேலைக்கு வருகின்றனர். கடந்த ஊரடங்கு சமயத்தில் தூய்மை பணியாளர்களுக்கு காலை மற்றும் பிற்பகலில் போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த முறை போக்குவரத்து வசதிகள் குறித்து அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகின்றது.

  இந்நிலையில் உக்கடம் பகுதியில் 50க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். பல்வேறு பகுதிகளில் இருந்து உக்கடம் பேருந்து நிலையத்திற்கு வந்திருப்பதாகவும் கடந்த முறை போல பேருந்து வசதி செய்து இருப்பார்கள் என எதிர்பார்த்ததாகவும், ஆனால் பேருந்து வசதி செய்து கொடுக்கப்படவில்லை எனவும் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

  காலை 5.30 மணிக்கே உக்கடம் பேருந்து நிலையம் வந்து விட்ட நிலையில் , பணி ஓதுக்கப்பட்ட இடங்களுக்கு பேருந்து வசதி இல்லாததால் எப்படி செல்வது என தெரியாமல் நிற்பதாக தூய்மை பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். மாநகராட்சி பகுதியில் குப்பை அள்ளுவது, சுத்தம் செய்வது, வீடுகளுக்கு சென்று குப்பை சேகரிப்பது, கொரொனா தொற்று தடுப்பு மருந்து அடிப்பது உள்ளிட்ட அனைத்து பணிகளும் தாங்கள் பணிக்கு சென்றால் மட்டுமே நடக்கும் எனவும், தங்களால் அங்கு செல்ல முடியாவிட்டால் இந்த பணிகள் முடங்கிப் போகும் எனவும் தூய்மை பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

  தங்களுக்கு கடந்த முறை போல பேருந்து வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும் என அதிகாரிகளிடம் முறையிட்டு இருப்பதாகவும் , உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் தெரிவித்து இருப்பதாகவும் தூய்மை பணியாளர்கள் தெரிவித்தனர். காலை நேரத்தில் ஊரடங்கு காரணமாக முன்கள பணியாளர்கள் பணிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து கிடைத்த வாகனங்கள் மூலம், டெப்போவிற்கு திரும்பிய பேருந்துகள் மூலம் தூய்மை பணியாளர்கள் வேலைக்கு சென்றனர்.
  Published by:Vijay R
  First published: