• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கோவையில் சர்ச் ஊழியர்கள் வைப்பு தொகை ரூ.25 கோடியை மோசடி செய்த பேராயர் மீது வழக்குப்பதிவு!

கோவையில் சர்ச் ஊழியர்கள் வைப்பு தொகை ரூ.25 கோடியை மோசடி செய்த பேராயர் மீது வழக்குப்பதிவு!

சிஎஸ்ஐ டயோசிசன்

சிஎஸ்ஐ டயோசிசன்

கோவையில் சி.எஸ்.ஐ திருமண்டல ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி தொகை ரூ.25 கோடியை மோசடி செய்ததாக பாதியார் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் சி.எஸ்.ஐ கோவை மண்டல பேராயர் உட்பட 4 பேர் மீது கூட்டுசதி, மோசடி உட்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

  • Share this:
கோவையில் சி.எஸ்.ஐ திருமண்டல ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி தொகை ரூ.25 கோடியை மோசடி செய்ததாக பாதியார் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் சி.எஸ்.ஐ கோவை மண்டல பேராயர் உட்பட 4 பேர் மீது கூட்டுசதி, மோசடி உட்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை வெள்ளலூரில் உள்ள சி.எஸ்.ஐ., சர்ச்சில் பாதிரியாராக இருப்பவர் கெர்சோம் ஜேக்கப். இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக சி.எஸ்.ஐ திருச்சபையில் உள்ள தேவாலயங்களில் பாதிரியாராக பணிபுரிந்து வருகின்றார். இதே போன்று சி.எஸ்.ஐ  திருச்சபையின் கீழ் 125 இடங்களுக்கு மேற்பட்ட தேவாலயங்களில் பாதிரியார்கள், ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களின் ஊதியத்தில் இருந்து சி.எஸ்.ஐ திருச்சபை நிர்வாகம் மாதம் தோறும் வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்யபடுகின்றது.

இந்நிலையில் பாதிரியார் கெர்சோம் ஜேக்கப் தனது வருங்கால வைப்பு நிதியில் உள்ள தொகை குறித்து சி.எஸ்.ஐ தேவாலய கோவை மண்டல தலைமை அலுவலகத்தில் கேட்டுள்ளார். உரிய பதில் அளிக்காத நிலையில் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் விசாரித்த போது கடந்த ஆண்டுதான் வருங்கால வைப்பு நிதி கணக்கு துவங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்யப்பட்ட நிலையில் கடந்த ஆண்டுதான் சி.எஸ்.ஐ கோவை மண்டல தலைமையகம் கணக்கு துவங்கி இருப்பதை அறிந்த பாதிரியார் மோசடி நடைபெற்று இருப்பதை உணர்ந்து கோவை குற்றபிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார்.

அதில் கடந்த, 2005 முதல், கோவை சி.எஸ்.ஐ திருமண்டல அலுவலகத்தில் பிடித்த பணம் மோசடி செய்யப்பட்டு இருப்பதாகவும், இதே போல திருமண்டலத்திற்கு உட்பட்ட, 125 சர்ச்சுகளில் பணிபுரிந்து வரும்  பலரது வருங்கால வைப்பு நிதி சுமார் 25 கோடி வரை மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து இருந்தார்.

இவரது புகாரின் பேரில் சி.எஸ்.ஐ கோவை மண்டல பேராயர்  திமோத்தி ரவீந்தர், முன்னால் செயலாளர் சார்லஸ்,ஆலோசகர் மங்கள் தாஸ், பொருளாளர் செல்வகுமார் ஆகிய நால்வர் மீது, மோசடி, கூட்டு சதி , நம்பிக்கை மோசடி ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பேராயர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பது சி.எஸ்.ஐ பிரிவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலேயே அதிகமான சொத்துகள் கல்வி நிறுவனங்களுடன் இருக்கும் சி.எஸ்.ஐ நிர்வாகத்தின் ஓரு பகுதியான கோவை திருமண்டலம் மோசடி சர்சையில் சமீபகாலமாக தொடர்ந்து சிக்கி வருவது குறிப்பிடத்தக்கது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Esakki Raja
First published: