அன்னையர் தினமான இன்று
கோவை இட்லி பாட்டிக்கு சொந்தமாக வீட்டை கட்டிக்கொடுத்து அவரது கனவை தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா நிறைவேற்றியுள்ளார்.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள ஆலாந்துறை வடிவேலாம்பாளையத்தை சேர்ந்தவர் கமலாத்தாள் பாட்டி. 85 வயதாகும் இவர், ஒரு ரூபாய்க்கு இட்லி விற்றுவருகின்றார். உதவிக்கு யாரும் இல்லாமல் தனி ஆளாக 30 வருஷமாக இந்த இட்லி கடையை அவர் நடத்தி வருகிறார். அவரே இட்லி, சட்னி, சாம்பார் தயாரித்து விற்பனை செய்து வருகின்றார்.
ஆரம்பத்தில் ஒரு இட்லி 25 பைசாவுக்கு விற்ற நிலையில் அதை ஒரு ரூபாயாக விலையை கூட்டி விற்பனை செய்து வருகின்றார்.
இட்லி சமைக்க கேஸ் அடுப்பு இல்லாமல், மாவு அரைக்க கிரைண்டர் இல்லாமல், சட்னி அரைக்க மிக்சி இல்லாமல் வெறும் அடுப்பும், ஆட்டுக்கல்லும் கொண்டு சுடச்சுட ஆவி பறக்க சுவையான இட்லி, சாம்பார் ஆகியவற்றை தயார் செய்து விடியற் காலையிலேயே விற்று வந்தார்.
இதையும் படிங்க - கோவை ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு சொந்த வீடு வழங்க முன் வந்தது மஹிந்திரா நிறுவனம்
சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள ஏழை, எளிய மக்கள் ஏராளமானோர் தினமும் இந்த கடைக்கு வந்து சென்ற நிலையில் பாட்டி பிரபலமடைந்தார். ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்து வரும் கமலாத்தாள் பாட்டியின் சேவையை அறிந்த மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் அவரை தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு வாழ்த்தியிருந்தார்.
விறகு அடுப்புக்கு மாற்றாக சமையல் எரிவாயு அடுப்பு, கிரைண்டர், மிக்சி, ஆகியவற்றை கமலாத்தாளுக்கு ஆனந்த் மஹேந்திரா வழங்கினார். இதனைத்தொடர்ந்து பாரத்கேஸ் மாதம் தோறும் இரண்டு சிலிண்டர்களையும், ஹெச் பி கேஸ் ஒரு சிலிண்டரையும் கமலாத்தாளர் பாட்டிக்கு வழங்கி வருகின்றனர்.
இதையும் படிங்க - வெள்ளியங்கிரி மலை ஏறுவதற்கு "க்ரீன் சிக்னல்"
இந்நிலையில் இட்லி பாட்டி ஆனந்த் மஹிந்திரா நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி புகழிடம் தனக்கு ஒரு வீடு கட்டித்தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இதனையடுத்து அவர் இதுகுறித்து ஆனந்த் மஹிந்திராவிடம் தெரிவித்த நிலையில், அவரும் நிறைவேற்றுவதாக உறுதியளித்திருந்தார்.
மஹிந்திரா குழுமத்தின் ரியல் எஸ்டேட் பிரிவான மஹிந்திரா லைஃப் ஸ்பேசஸ் நிறுவனம் 2.5 லட்ச ரூபாய் செலவில் 1.75 சென்ட் நிலம் வாங்கி, கமலாத்தாள் பெயரில் பதிவு செய்து, ஆவணத்தை அவரிடம் வழங்கி உள்ளது.
இதே போல அதிமுக முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூர் தொகுதி எம் எல். ஏ வும், முன்னாள் அமைச்சருமான எஸ் பி வேலுமணி, 2.5 லட்ச ரூபாய் செலவில் 1.75 சென்ட் இடத்தை இட்லி பாட்டியின் பெயரில் பதிவு செய்து கொடுத்துள்ளனர்.
மொத்தம் 3.5 சென்ட் நிலத்தில் கமலாத்தாள் பாட்டிக்கு கிடைத்த நிலையில் வீடு மற்றும் இட்லிக் கடை நடத்துவதற்கான கட்டுமானப் பணிகளை மஹேந்திரா நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் 28 ஆம் தேதியன்று 7 லட்சம் செலவில் பூமி பூஜை போட்டு தொடங்கியது. இந்த கட்டுமான பணிகள் கடந்த 5 ம் முடிந்தது.
இந்நிலையில் மஹிந்திரா குழுமத்தின் திருப்பூர் முதன்மை செயல் அதிகாரி இட்லி பாட்டி கமலாத்தாளிடம் புதிதாக கட்டப்பட்ட வீட்டிற்கான அன்னையர் தினத்தை முன்னிட்டு சாவியை வழங்கினார். இதனை மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியோடு பகிர்ந்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.