கோவை அரசு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் வசதி ஏற்படுத்த 48 மணி நேரத்தில் ரூ.1 கோடி நிதி திரட்டிய அமெரிக்க மருத்துவர்

Youtube Video

கோவை அரசு மருத்துமனைகளுக்கு வெறும் 48 மணி நேரத்தில் 1 கோடி நிதி திரட்டி  ஆக்சிஜன் கட்டமைப்புகளை ஏற்படுத்தி தந்துள்ளார் அமெரிக்க மருத்துவர்.

  • Share this:
    கோவையில் கடந்த சில தினங்களாக தினமும் சராசரியாக 3,200-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. தொற்றால் பாதிக்கப்பட்டோரில் பெரும் சதவீதத்தினர் தனியார் மருத்துவமனைகளைக் காட்டிலும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனைக்கே அதிக அளவில் வருகின்றனர். அதனால், அரசு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ஏற்பட்டது.

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் ரங்கசாமி. 1992ம் ஆண்டு கோவை அரசு மருத்துவ கல்லூரியில் டாக்டர் பட்டம் பெற்ற இவர், அமெரிக்காவின் ரினோ நகரில் உள்ள மருத்துவமனையில் மூளை ரத்தநாள அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றி வருகிறார். தற்போது கோவையில் கொரோனா தொற்று அதிகம் பரவி வரும் சூழலில், அங்குள்ள அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இருப்பதை தனது அத்தை வாணி மோகன் மூலம் ராஜேஷ் ரங்கசாமி அறிந்தார். உடனடியாக நண்பர்களிடம் வாட்ஸ் அப் மற்றும் முகநூலில் தொடர்பு கொண்ட மருத்துவர், தனது மனைவியின் ஆர்டர் அறக்கட்டளை மூலம் நிதி திரட்டினார். மருத்துவரின் முயற்சிக்கு கைமேல் பலனாக 48 மணி நேரத்தில் 1 கோடி ரூபாய் நிதி கிடைத்தது.

    அமெரிக்க மருத்துவரின் முயற்சியால், தற்போது கோவை அரசு மருத்துவமனையில் 51 லட்ச ரூபாய் மதிப்பிலான 200 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி கட்டமைப்பு மற்றும் 5 ஆக்சிஜன் செறிவூட்டி கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதேபோல் இஎஸ்ஐ மருத்துவமனையில் நிமிடத்திற்கு 100 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி கட்டமைப்பு மற்றும் 3 லட்ச ரூபாய் செலவில் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    இதுதொடர்பாக அமெரிக்காவில் வசிக்கும் மருத்துவர் ராஜேஷ் ரங்கசாமி கூறியதாவது, ‘மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த நான், கடந்த 1992-ம் ஆண்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்தேன். தற்போது அமெரிக்காவின் ரினோ நகரில் உள்ள மருத்துவமனையில் மூளை ரத்த நாள அறுவை சிகிச்சை நிபுணராக உள்ளேன். மனைவி நித்யா மோகன் மற்றும் குழந்தை களுடன் இங்கு வசிக்கிறேன்.

    நானும், மனைவியும் இணைந்து கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு ‘ஆர்டர் கார்ப்பரேஷன்’ அறக்கட்டளையைத் தொடங்கினோம். தற்போதைய சூழலில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கோவையில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் தேவை என்பதை, மருத்துவராக உள்ள எனது அத்தை வாணி மோகன், கங்கா மருத்துவமனையின் மயக்கவியல் துறை நிபுணர் மருத்துவர் பாலவெங்கட் ஆகியோர் மூலம் அறிந்தோம். இதையடுத்து எங்களது அறக்கட்டளை மூலம் நிதி திரட்டி, மருத்துவமனைக்கு தேவையான ஆக்சிஜன் கட்டமைப்புகளை ஏற்படுத்தித் தர முடிவெடுத்தோம். அதன்படி, கடந்த வாரம் ஒருநாள் நிதி திரட்டும் பணியை தொடங்கினோம்.

    அமெரிக்காவில் உள்ள எங்களது நண்பர்கள், தெரிந்தவர்கள் உள்ளிட்டோரிடம் செல்போன், இ-மெயில், வாட்ஸ்-அப், குறுந் தகவல், முகநூல் மூலமாக தொடர்பு கொண்டு நான், எனது மனைவி, முனைவர் ரவிகுமார், ரியா ராஜேஷ், ரித்திக் ராஜேஷ், சவுமியா குமார், பொறியாளர் விஜயகீர்த்தி ராமலிங்கம், மருத்துவர் பிரசாந்த் ராகவன் உள்ளிட்டோர் நிதி திரட்டினோம். அடுத்த 48 மணி நேரத்தில் ரூ.1 கோடி நிதி திரட்டப்பட்டது.

    பின்னர், ஆக்சிஜன் கட்டமைப்புகளை ஏற்படுத்தும் தனியார் நிறுவனத்தை தொடர்பு கொண்டு, கோவை அரசு மருத்துவமனை, இஎஸ்ஐ மருத்துவமனைகளில் ஆக்சிஜன் கட்டமைப்புகளை ஏற்படுத்த ஆர்டர் செய்து தொகையை வழங்கினோம். கோவை அரசு மருத்துவமனையில் ரூ.51 லட்சம் மதிப்பில் நிமிடத்துக்கு 200 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தியாகும் கட் டமைப்பு, ரூ.5 லட்சம் மதிப்பில் 5 ஆக்சிஜன் கான்சென்ட்ரேட்டர்கள், இஎஸ்ஐ மருத்துவமனையில் ரூ.27 லட்சம் மதிப்பில் நிமிடத்துக்கு 100 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தியாகும் கட்டமைப்பு, ரூ.3 லட்சம் மதிப்பில் படுக்கை வசதிகள் ஆகியவை ஏற்படுத்தப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டன’ என்று தெரிவித்தார்.

    இதுகுறித்து தெரிவித்த கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா, ’அமெரிக்க மருத்துவ தம்பதியரின் ‘ஆர்டர் கார்ப்பரேஷன்’ அறக்கட்டளை அமைப்பினர் ஏற்படுத்திக் கொடுத்த ஆக்சிஜன் கட்டமைப்பு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. அதன்மூலம் 40 படுக்கைகளில் உள்ள கொரோனா நோயாளிகள் பயன் பெறுகின்றனர்’’ என்றார்.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Karthick S
    First published: