கோவை வெள்ளலூரில் தந்தை
பெரியார் சிலைக்கு (Periyar Statue) செருப்பு மாலை அணிவித்து அவமதிப்பு செய்த இந்து முன்னணி (Hindu Munnani) அமைப்பினை சேர்ந்த மோகன்ராஜ், அருண் கார்த்திக் ஆகிய இருவர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மாநகர காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
கோவை வெள்ளலூர் பேருந்து நிலையம் அருகே தந்தை பெரியார் பகுத்தறிவு படிப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த படிப்பகம் முன்பு உள்ள தந்தை பெரியார் சிலைக்கு கடந்த 8ஆம் தேதி செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு, சிலையின் மீது காவி நிற பொடி தூவி அவமரியாதை செய்யப்பட்டது.
இது தொடர்பாக போத்தனூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு ஆய்வு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த அருண்கார்த்திக் மற்றும் மோகன்ராஜ் என்ற இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட அருண் கார்த்திக் மற்றும் மோகன்ராஜ் ஆகிய இருவர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து கோவை மாநகர காவல் ஆணையர் பிரதீப்குமார் உத்திரவிட்டார். சிறையில் உள்ள இருவரிடமும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான உத்திரவு நகலினை காவல் துறையினர் வழங்கினர்.
Must Read : டெல்லியில் வாய்ப்பு மறுப்பு.. தமிழக ஊர்தி சென்னை குடியரசு தின விழாவில் பங்கேற்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
கைது செய்யப்பட்ட இந்து முன்னணி அமைப்பினர் மீது ஒரே வாரத்தில் குண்டர் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.