கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காய்ந்து போன மூங்கில்களால் தீ விபத்து ஏற்படாமல் இருப்பதற்காக அவற்றை 6 கும்கி யானைகள் மூலம் அகற்றும் பணி நடைபெற்று வருகின்றது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான மூங்கில் காடுகள் உள்ளன. சுமார் 30 ஆண்டுகள் வரை வளரும் மூங்கில்கள் பூ பூத்தபின் அவை மெல்ல காய்ந்து விடும். அப்படி காய்ந்து போன மூங்கில் மரங்கள் ஒன்றுடன் ஒன்று உராய்வதன் மூலம் காட்டு தீ பிடிக்கும் வாய்ப்புண்டு.
சமீபத்தில் ஆனைமலை புலிகள் காப்பகத்தை சேர்ந்த வனத்துறையினர் டிரோன் கேமரா மூலம் வனப்பகுதியை ஆய்வு மேற்கொண்டதில் பெரும்பாலான மூங்கில் மரங்கள் பூ பூத்து மரங்கள் காய்ந்து இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து காய்ந்து போன மூங்கில்களை அகற்ற கோழிகமுத்தியில் இருந்து கும்கி யானைகளை அழைத்து வந்து காய்ந்து போன மூங்கில்களை அகற்றும் பணியானது நடைபெற்று வருகின்றது.
முதல்கட்டமாக சேத்துமடை - டாப்சிலிப் பகுதியில் காய்ந்த நிலையில் இருக்கும் மூங்கில் மரங்களை அகற்றும் பணிகளில் கும்கி யானைகளானது ஈடுபடுத்தப்பட்டுள்ளது. கோழிகமுத்தி யானைகள் முகாமில் இருந்து பயிற்சி பெற்ற முத்து, சின்னதம்பி, செல்வி, காவேரி, அபிநயா மற்றும் சஞ்சீவ் ஆகிய 6 கும்கி யானைகள் இந்த தீத்தடுப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
வனப்பகுதிகளில் காய்ந்த மூங்கில்களை அகற்றுவது மிக கடுமையான பணி என்றாலும் அதில் கும்கி யானைகளை பயன்படுத்தி காட்டுத் தீயை உருவாகும் வாய்ப்பினை தடுக்கும் பணியில் வனத்துறை அதிகாரிகள் கடந்த சில தினங்களாக ஈடுபட்டு வருகின்றனர்.
Must Read : ஞாயிறு மற்றும் இரவு நேர ஊரடங்கு நீக்கம் - தமிழக அரசு அறிவிப்பு
இந்த பணி மேலும் சில வாரங்கள் ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் தொடர்ந்து நடத்த வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். மூங்கில் காடுகளில் காய்ந்த மூங்கில்களை அகற்றும் போது காட்டு தீ உருவாகும் வாய்ப்பு குறைந்து போவதுடன் வனமும் பாதுகாக்கப்படும் என்பதால் இதில் வனத்துறையினர் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். தற்போது ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தீத்தடுப்பு பணிகளில் 6 கும்கி யானைகளும் ஈடுபடுத்தபட்டு இருப்பது குறிப்பிடதக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.