கோவையில் கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த 51 குழந்தைகள் உதவித்தொகை கோரி விண்ணப்பம்!

பெற்றோரை இழந்த குழந்தைகள் உதவித்தொகை கோரி விண்ணப்பம்

குழந்தைகள் பாதுகாப்புக்கு யாரும் இல்லையெனில், 1098 என்ற எண்ணிலும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தையும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் தெரிவித்துள்ளார்.

  • Share this:
கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த  91 குழந்தைகளில்,  51 குழந்தைகள் சார்பில் உதவித்தொகை கேட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அவை பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் கோவை  மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சுந்தர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குழந்தைகளை பாதுகாக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதில் தாய், தந்தை இழந்த குழந்தைகளுக்கு 5 லட்ச ரூபாயும், பெற்றோரில் ஒருவரை மட்டும் இழந்த குழந்தைகளுக்கு 3 லட்ச ரூபாயும் அரசு சார்பில் இழப்பீடு வழங்குவதுடன் குழந்தைகளின் பாதுகாப்பையும் தமிழக அரசு உறுதி செய்து வருகிறது.

இந்நிலையில் கோவை மாவட்டத்தில் இது குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தியதில் மாவட்டம் முழுவதும் 91 குழந்தைகள், தாய், தந்தை இருவரில் ஒரு வரை இழந்து இருப்பதும், இரு குழந்தைகள் பெற்றோர் இருவரையும் இழந்து இருப்பது தெரியவந்துள்ளது.

மொத்தம் 850 குடும்பங்களில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் இந்த விபரங்கள் தெரியவந்துள்ளதாகவும், இதில் 51 குழந்தைகள் சார்பில் உதவித்தொகை கேட்டு விண்ணப்பம் கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் அந்த விண்ணப்பங்கள் தற்போது பரிசீலனையில் இருப்பதாகவும் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சுந்தர் தெரிவித்துள்ளார்.

Also read: ஈகோ என்பது செருப்பு மாதிரி, வீட்டுக்கு வெளியில் விட்டு விட வேண்டும்... கணவன், மனைவி இருவருக்கும் உயர் நீதிமன்றம் அறிவுரை

மேலும் கொரோனா தொற்றால் பெற்றோர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில், குழந்தைகளுக்கு பாதுகாவலர் இல்லையெனில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் மூலமாக 3  காப்பகங்களில் குழந்தைகள் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

பாதுகாவலரின் பொறுப்பில் இருக்கும் குழந்தைகள் 20 பேருக்கு தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலமாக, நான்கு மாதத்திற்கு தேவையான உணவு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

குழந்தைகளின் பெற்றோர்கள் இருவர் அல்லது ஒருவர் இறந்தால், அவர்களின் பாதுகாப்புக்கு யாரும் இல்லையெனில், 1098 என்ற எண்ணிலும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தையும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சுந்தர் தெரிவித்துள்ளார்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Esakki Raja
First published: