Home /News /tamil-nadu /

அந்நிய செலாவணி வர்த்தகம்.. ரூ.300 கோடியை ஏப்பம் விட்டு தலைமறைவான மோசடி தம்பதி

அந்நிய செலாவணி வர்த்தகம்.. ரூ.300 கோடியை ஏப்பம் விட்டு தலைமறைவான மோசடி தம்பதி

ரூ.300 கோடி மோசடி

ரூ.300 கோடி மோசடி

Coimbatore : கோவையில் 300 கோடி மோசடி செய்ததாக எழுந்த புகாரில், ஆல்பா பாரெக்ஸ் நிறுவன உரிமையாளர்களான தம்பதி மீது வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

கோவை காளப்பட்டி பகுதியில்  ‘ஆல்பா  பாரக்ஸ் மார்க்கெட்ஸ்’ என்ற நிறுவனம் கூடுதல் வட்டி கொடுப்பதாக கூறி பொதுமக்களிடம் கோடிக் கணக்கான ரூபாய் மோசடி செய்ததாக அந்த நிறுவன உரிமையாளர் விமல்ராஜ், அவரது மனைவி ராஜேஸ்வரி ஆகியோர் மீது  பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் 5 பிரிவுகளில்  வழக்கு பதிவு செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை காளப்பட்டி பகுதியில் ‘ஆல்பா பாரக்ஸ் மார்க்கெட்ஸ்’ என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வருபவர் விமல் குமார். இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்கள் ‘விமல்குமார் மிஸ்டர் மணி’ என்ற யூடியூப் சேனலை நடத்தி வந்தனர். இவர்கள் கோவை, திருச்சி ,மதுரை நெல்லை, தூத்துக்குடி, தஞ்சாவூர், சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கிளை அலுவலகம் துவங்கி, அந்நிய செலவாணி வர்த்தகம் தொடர்பாக பயிற்சி அளிப்பதாக கூறி  முதலீட்டாளர்கள் சந்திப்புகளை நடத்தி உள்ளனர் .‘

மேலும், இந்த தம்பதி மாநிலம் முழுவதும் பல்வேறு நபர்களிடம் இருந்து ஆல்பா டிரேடர்ஸ், ஆல்பா எஜூகேஷன், ஆல்பா டிரேடிங் இன்ஸ்டியூட், ஆல்பா அகடமி,  ஆல்பா எஸ்.ஆர்.என் சர்வீசஸ்  என பல்வேறு வர்த்தக நிறுவனங்களுக்காக முதலீடுகளை பெற்றனர். இந்த முதலீடுகளுக்கு 8 முதல் 10 சதவீதம் வரை வட்டி தருவதாக கூறிய அவர்கள் சுமார் 300 கோடி ரூபாய் வரை மக்களிடம் பணம் வசூல் செய்துவிட்டு ஏமாற்றியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த நிறுவனங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சொன்னபடி வட்டியை கொடுக்காத நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த முருகன் என்பவர் கடந்த 30ம் தேதி விமல்ராஜ் , அவரது மனைவி ராஜேஸ்வரி ஆகியோர் மீது கோவை பொருளாதார குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அந்நிய செலவாணி வர்த்தக நிறுவனத்தில் 16 லட்சம் முதலீடு செய்ததாகவும் தன்னை விமல்குமார் , ராஜேஸ்வரி தம்பதியினருர் ஏமாற்றி விட்டதாகவும் இதேபோன்று தமிழகம் முழுவதும் ஏராளமான நபர்கள்  இவர்களால்  ஏமாந்து இருப்பதாகவும் முருகன் தெரிவித்துள்ளார்.

Must Read : ராஜபக்சே வெளிநாடு செல்ல திட்டம்? விமான நிலையம் அருகே காத்திருக்கும் இலங்கை மக்கள்

இதனையடுத்து கூட்டுசதி , மோசடி உட்பட 5 பிரிவுகளின் கீழ் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனிடையே விமல்ராஜ் அவரது மனைவி ராஜேஸ்வரி ஆகியோர் தலைமறைவாகினர். இந்நிலையில் விமல்ராஜ் நடத்தி வந்த அலுவலகம், வீடு ஆகிய இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினர். மேலும்  தலைமறைவான தம்பதியை போலீசார் தேடி வருகின்றனர்.
Published by:Suresh V
First published:

Tags: Coimbatore, Crime News

அடுத்த செய்தி